Breaking News

பேருந்தில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை - போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

 பேருந்தில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - போக்குவரத்துத் துறை

 



பேருந்தில் பயணிக்கும் பயணிகளை ஓட்டுநர்களும், நடத்துநர்களும் தரக்குறைவாக நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 

மாநகர போக்குவரத்துக்கழகம் இயக்கும் சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணிக்கும் போது அவர்களிடம் நடத்துநர்கள் மரியாதையின்றி நடந்து கொள்வதாக அவ்வபோது புகார்கள் வருவதாக தெரிவித்துள்ளது.எனவே மாநகரப் பேருந்துகளில் மகளிர் எந்தவித பயண அட்டை இல்லாமலும், கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள வரும்போது, அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களும் போக்குவரத்து துறையின் நிலையான இயக்க நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுத்துள்ளது.

பயணிகள் மொத்தமாகவோ அல்லது ஒருவரோ பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும்.ஓட்டுநர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தக் கூடாது.

நடத்துநர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடம் இல்லை என பேருந்தில் ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடவோ அல்லது அவர்களிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ நடந்து கொள்ள கூடாது என்றும், வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிந்து, பெண் பயணிகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெண் பயணிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்காணித்து, அவர்களை பாதுகாப்பாக பேருந்தில் ஏற்றி இறக்கிவிட வேண்டும் என்றும், மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் ஏறி, இறங்கும் போது கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல நிலையான இயக்க நடைமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. 

நிலையான இயக்க நடைமுறைகளை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback