Breaking News

குடும்பகட்டுப்பாடு இழப்பீடு தொகை உயர்வு... முழு விவரம்

அட்மின் மீடியா
0
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரிய கரும்பூரைச் சேர்ந்த கனிமொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2016ம் ஆண்டு பாலாஜி என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும், தங்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், பாடி அரசு மருத்துவமனையில் கடந்த 2018-ம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டேன். குடும்ப கட்டுப்பாடு செய்த பின்பு தான் கர்ப்பமானதால்  உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து பாடி மருத்துவமனைக்குச் சென்று கேட்டதில் அங்கு உரியப் பதில் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். 
 

 
குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை தவறும்பட்சத்தில் அதற்கான இழப்பீடாக ரூ. 30 ஆயிரம் தருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார். மேலும், குடும்ப கட்டுப்பாடு தோல்வி அடைந்ததால் தனக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, மனுதாரரின் கோரிக்கை பரிசீலித்து முடிவெடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மருத்துவத் துறை அதிகாரி உள்ளிட்டவருக்கு உத்தரவிட்டிருந்ததுடன் அவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடியும் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குடும்ப கட்டுப்பாடு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் ஒரு வாரத்தில் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு தொகை ரூ. 2 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும், ஒரு மாத காலத்திற்குள் இறந்தால் ரூ.50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி இருப்பதாகவும், குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகையான ரூ. 30 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அரசாணையைத் தாக்கல் செய்தார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி எம். தண்டபாணி வழக்கை முடித்து வைத்து, மனுதாரருக்கு வேறு ஏதாவது நிவாரணம் தேவைப்பட்டால் தனியாக வழக்கு தொடரலாம் எனக் கூறி உத்தரவிட்டார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback