இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு!
இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு!
இலங்கையில் பொருளாதார சரிவு வரலாறு காணாத அளவிற்கு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் களம் இறங்கிய நிலையில், அரசியல் நெருக்கடியும் அங்கு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்ததால் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதுடன், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். இதையும் ஏற்காத போராட்டக்காரர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மிகப்பெரிய பொருளாதார சரிவில் இருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் விழி பிதுங்கி இருக்கும் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர்நந்தலால் வீர சிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசால் எந்த கடனுக்கான பணத்தையும் திருப்பி செலுத்த முடியவில்லை என்றும் கடந்த மாதம் 18ம் தேதி கடனாளர்களுக்கு செலுத்த வேண்டிய 78 மில்லியன் டாலர் பணத்திற்கான கூடுதல் ஒரு மாத அவகாசமும் முடிந்துவிட்ட நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்து இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பணவீக்கம் 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கும் என அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த கடன் அளவை மறு சீரமைக்கும் வரை இலங்கை அரசால் கடனுக்கான எந்த தொகையையும் செலுத்த முடியாது கொள்கை வகுப்பாளர்கள் இலங்கைக்கு கடன் கொடுத்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். இலங்கை நாணயம் மற்றும் பொருளாதார நெருக்கடி இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நியச் செலாவணி இருப்பு கூட இல்லாமல் இலங்கை பரிதவித்து வருகிறது. 1948 இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை முதல் முறையாக வாங்கிய கடனுக்குத் திருப்பி செலுத்த முடியாமல் திவாலாகியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்