பாஜக பூத் ஏஜெண்ட் ஹிஜாபை கழட்ட சொன்ன வார்டில் திமுக வெற்றி - எதிர்த்து நின்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்!
தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8ஆவது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இஸ்லாமிய பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி வாக்களிக்க வந்தார். ஹிஜாப் அணிந்து வந்த அந்தப் பெண்ணிடம் , அங்கிருந்த பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன், அதனை கழற்றிவிட்டு வாக்களிக்குமாறு வற்புறுத்தினார்.அதற்கு அந்தப் பெண் மறுக்கவே அவருடன் கிரிராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிரிராஜனின் கருத்துக்கு அங்கிருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திமுக உள்ளிட்ட பிற கட்சி பூத் ஏஜெண்ட்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. வாக்குப்பதிவும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் வாக்குச்சாவடியிலிருந்தே வெளியேற்றப்பட்டார்.மேலும் கிரிராஜன் மீது மதத்தின் உணர்வைப் புண்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டர்
இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த 8ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக நகரச் செயலாளர் யாசீன் அமோக வெற்றிபெற்றார். அனைத்து கட்சி அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர்.
Tags: தமிழக செய்திகள்