Breaking News

கொரோனா தடுப்பு நடவடிக்கை; ஆடி கிருத்திகை, ஆடி ஞாயிறையொட்டி முருகன், அம்மன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை: இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழக கோவில்களில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு சாமி தரிசனத்திற்கு தடைஆடி மாத திருவிழாக்களையொட்டி பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து அந்தந்த பகுதி மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்


 

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமான் கோயில்களில் பால்குடம், காவடி எடுப்பது வழக்கம். அத்துடன் முருகன் சந்நிதி உள்ள ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில் தமிழகத்தில் 

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று முதல் 3-ம் தேதி வரையிலும் , ஆடி அமாவாசை தினமான ஆகஸ்ட் 8- தேதி ஆகிய நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

நவகிரக கோயில்களில் பிரதானமான சூரியனார் கோயில், கஞ்சனூர் சுக்கிரன் கோயில் இன்று மூடப்பட்டது. 3 நாட்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள வடபழனி, கந்தகோட்டம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களிலும், அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆடி கிருத்திகையை ஒட்டி, ஆகஸ்டு 2 மற்றும் 3ம் தேதிகளில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலும், மக்கள் கூட்டத்தை தடுக்கும் நோக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது

தஞ்சை பெரிய கோயில் இன்று மூடப்பட்டது.இங்கு 3 நாட்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் , கல்லணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் நீர்நிலைகளில் நீராடவும், கரைகளில் ஆடிபெருக்கு கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தை சுற்றி உள்ள அனைத்து கோவில்களும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கூட்டம் கூடுவதை தவிர்க்க பக்தர்களுக்கு 3 தினங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், கள்ளழகர் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் வரும் இரண்டாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஆடி கிருத்திகை அன்று கோயில் நிகழ்வுகளில், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது.

கடலுார் மாவட்டத்தில் நாளை (2ம் தேதி) ஆடி கிருத்திகை, 3ம் தேதி ஆடிப் பெருக்கு மற்றும் 8ம் தேதி ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். சிறப்பு பூஜையில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்பர். எனவே கொரோனா தொற்று பரவாமல் இருக்க இன்று முதல் 3ம் தேதி வரையும் மற்றும் 8ம் தேதி என 4 நாட்கள் பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. கோவில்களில் சுவாமிக்கு பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் , படைவீடு ரேணுகாம்பாள் கோயில் மற்றும் முருகன் கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களிலும் , ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது .ஆகமவிதிப்படி அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் மூலமாக அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் வழக்கம்போல் நடைபெறும் என ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில், திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில், மயிலம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், அவலூர்பேட்டை சித்தகீரிஸ்வரர் முருகன் திருக்கோயில், கீழ்புத்துப்பட்டு மஞ்சினீஸ்வரர் திருக்கோயில் உட்பட அனைத்து பிரதான திருக்கோயில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு 01.08.2021 ஞாயிற்றுக்கிழமை முதல் 03.08.2021 செவ்வாய்க்கிழமை வரை சாமி தரிசனம் செய்வதற்கும் திருவிழாக்கள் நடத்துவதற்கும் அனுமதி கிடையாது என ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா மீண்டும் தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கூட்டம் கூடுவதை தவிர்க்க இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback