ஸ்டாலினை தொடர்ந்து, வைகோ, அன்புமணி, மற்றும் சீமானை சந்திந்த விஜய் வைரல் புகைப்படம்
ஸ்டாலினை தொடர்ந்து, வைகோ, அன்புமணி, மற்றும் சீமானை சந்திந்த விஜய் வைரல் புகைப்படம்
ஸ்டாலின்:-
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், இன்று (மே 11) மூத்த அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்துப் பேசினார்.
மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், முதலமைச்சர் விஜய்க்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், "தமிழக மக்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய ஆலோசனைகளையும், அன்பான வாழ்த்துகளையும் தம்பி விஜய்க்கு வழங்கினேன்" என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அரசியல் ரீதியாக இருவரும் எதிர் துருவங்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் காட்டிய இந்த பரஸ்பர மரியாதை தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, முதலமைச்சர் விஜயை வீட்டின் வாசலுக்கே வந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கட்டிப்பிடித்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாநில உரிமைகளை மீட்டெடுப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலினின் இந்த வாழ்த்துப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் திமுக மற்றும் தவெக தொண்டர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், மு.க.ஸ்டாலின், வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இல்லங்களுக்கு சென்று வாழ்த்து பெற்றார்.
வைகோ:-
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பிறகு, சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு விஜய் வருகை தந்தார்.
அவரை வைகோவின் மகன் துரை வைகோ வாசலுக்கே வந்து இன்முகத்துடன் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். வைகோ அவர்கள் முதலமைச்சருக்குப் பொன்னாடை போர்த்தித் தனது அன்பை வெளிப்படுத்தினார்.
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முதலமைச்சர் விஜய்யின் நற்பண்புகள் தன்னை மிகவும் வியக்க வைத்ததாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
உங்கள் பேச்சுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்" என்று விஜய் தன்னிடம் கூறியதை வைகோ நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின் முடிவில், முதலமைச்சர் விஜய் புறப்படும் வரை வைகோ நேரில் வந்து கார் வரை நின்று அவரை வழியனுப்பி வைத்தார்.
தொடர்ந்து பேசிய வைகோ, "தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியதற்கான அடையாளம் தான் இந்தத் தேர்தல் முடிவு" என்று குறிப்பிட்டார். மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைத் தொடர்ந்து பாதுகாக்குமாறு விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததாக அவர் கூறினார். இளைய தலைமுறைத் தலைவர் ஒருவர் மூத்த தலைவர்களின் அனுபவங்களுக்கு மதிப்பு அளிப்பது தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தைக் கொண்டு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸ்:-
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று (மே 11) பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மூத்த தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெறும் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ ஆகியோரைச் சந்தித்த நிலையில், தற்போது பாமக தலைவரை விஜய் சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமான்:-
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு சென்று வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் விஜய்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரைத் தொடர்ந்து, சீமானை அவர் சந்தித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் வருகையை முன்னிட்டு, சீமான் தனது வீட்டின் வாசலுக்கே வந்து அவரை இன்முகத்துடன் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அப்போது, முதலமைச்சருக்குப் பூங்கொத்து கொடுத்துத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த சீமான், தேர்தல் வெற்றிக்காகவும் விஜய்க்குப் பாராட்டு தெரிவித்தார்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், தமிழகத்தின் உரிமைகள் மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து இரு தலைவர்களும் சுமுகமாக விவாதித்ததாகத் தெரிகிறது.நீண்ட காலமாக விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வந்த சீமான், தற்போது முதலமைச்சராகியுள்ள விஜயைத் தனது இல்லத்தில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சந்திப்பிற்குப் பிறகு, விஜய்யை வாசலுக்கே வந்து சீமான் வழியனுப்பி வைத்தார். பதவியேற்ற முதல் நாளிலேயே அனைத்துத் தரப்புத் தலைவர்களையும் நேரில் சந்திக்கும் விஜய்யின் இந்த அணுகுமுறை, ஒரு புதிய அரசியல் அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.
Tags: அரசியல் செய்திகள்