செய்தியாளர் சந்திப்பில் சி.வி.சண்முகம் பேசியது என்ன முழு விவரம் ADMK CV Shanmugam
செய்தியாளர் சந்திப்பில் சி.வி.சண்முகம் பேசியது என்ன முழு விவரம்

முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சி.வி. சண்முகம்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. அதனை முழுமையாக ஒத்துக்கொள்கிறோம். இந்தக் கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. இன்றைக்கு அதிமுக என்ன செய்யப்போகிறது. இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும், நிலைநிறுத்தப்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் விஜய் ஆட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்த மக்கள் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது.
இந்த நிலையில் அதிமுக கலந்தாலோசிக்கையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில யோசனைகளை முன்வைத்தார். இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது திமுகவை எதிர்த்துதான். எந்த திமுகவை எதிர்த்தோமோ அந்த திமுக ஆதரவோடு என்னை முதல்வராக தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டார்கள் என ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். திமுகவோடு இணைந்தால் அதிமுக இல்லாமல் போய்விடும், இது தவறு என்றோம். அதனை இபிஎஸ் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
அதனால் பெரும்பான்மையான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இப்போது இல்லை. மக்கள் தீர்ப்பை ஏற்று இன்று வெற்றிபெற்று முதலமைச்சராக உள்ள விஜய்யின் தவெக ஆட்சியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, அதிமுக சட்டமன்ற குழுவின் தலைவராக எஸ்பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை பொதுச் செயலாளரிடம் கூறியுள்ளோம். விரைவில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் கோரிக்கை வைக்கிறோம். கட்சியை மேம்படுத்த இபிஎஸ் விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவார் என நம்புகிறோம்" என்று பேசினார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
