தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல் - அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல் - அரசாணை வெளியீடு!
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு அளித்த அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது.
இதற்காக கடந்த 3 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடர்பான அரசாணை எப்போது வெளியிடப்படும் என்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கேள்வி நிலவி வந்தது. இந்த நிலையில், இது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,
“அரசு அலுவலர்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், மாநிலத்தின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வித தடைகளுமின்றி முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்க செய்ய வேண்டிய பொறுப்பு போன்ற பல அம்சங்களை சீர் தூக்கி பார்த்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களை தொடர்ந்து அளிக்கக் கூடிய ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.இந்த ஓய்வுதிய திட்டத்தின்படி, கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். இதில் பணியாளர்களின் பங்களிப்பு 10% மட்டுமே. கூடுதல் நிதியை அரசே ஏற்கும். ஓய்வூதியதாரர் இறந்து விட்டால், குடும்ப உறுப்பினருக்கு 60% குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.பணியின் போது உயிரிழந்தால் ரூ. 25 லட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும். பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுவோருக்கு (விருப்ப ஓய்வு) குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். இதில் முக்கிய அம்சமாக, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் மற்றும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு இடைப்பட்ட காலத்திற்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
