ஜல்லிக்கட்டு போட்டிகள் கடைப்பிடிக் வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
ஜல்லிக்கட்டு போட்டிகள் கடைப்பிடிக் வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாகவும், விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையிலும் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல், வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.
போட்டிகளை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு முழுமையாக இணங்கி போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு எவ்வித துன்பமோ, பாதிப்போ ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். காளைகளின் உடல்நிலை, போட்டி அரங்கின் பாதுகாப்பு, பக்தர்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.போட்டி நடத்தும் இடத்தில் போதிய மருத்துவ வசதிகள், கால்நடை மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ய வேண்டும். காளைகளை துன்புறுத்தும் வகையில் எந்த செயலும் செய்யக்கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம், போலீஸ், கால்நடைத்துறை ஆகியவை இணைந்து போட்டிகளை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டு நெறிமுறைகள், உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாப்பாக நடத்துவதோடு, விலங்குகளின் நலனையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
போட்டி ஏற்பாட்டாளர்கள் இவற்றை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசு எச்சரித்துள்ளது.தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த நெறிமுறைகள் போட்டிகளை ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன் இந்த அறிவிப்பு வெளியானது, ஏற்பாட்டாளர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை அளித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
