Breaking News

சென்னையில் நள்ளிரவில் நடைபெற்ற பைக் ரேஸ் எதிரே வந்த பைக் மீது மோதி நடந்த பயங்கர விபத்து - இருவர் உயிரிழப்பு

அட்மின் மீடியா
0

சென்னை, ராயப்பேட்டை மேம்பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட போது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பைக் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால் நேர்ந்த விபத்து


சென்னை ராயப்பேட்டை பேகம் சாகிப் சாலையை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் சுகைல் மற்றும் செல்போன் கடை ஊழியர் சோயல் ஆகியோர் நேற்றிரவு ராயப்பேட்டையில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட பீட்டர்ஸ் மேம்பாலத்தின் மீது நேற்றிரவு பத்தரை மணிக்கு பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். 

ராயப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை நோக்கி மேம்பாலத்தில் இருவரும் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் சீறிப் பாய்ந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. அதனால் இரு வாகனங்களும் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் மேம்பாலத்தின் எதிர் திசையில் தலைகவசம் அணிந்து சென்ற சக வாகன ஓட்டி ஒருவர் மீது பைக் ரேஸில் ஈடுபட்ட வாகனங்களில் ஒன்று மோதி, அந்த நபர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில், பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் சுகைல் மற்றும் எதிர்திசையில் வந்த ராயப்பேட்டையை சேர்ந்த 49 வயது குமரன் ஆகியோர் உயிரிழந்தனர்

பைக் ரேஸில் ஈடுபட்ட மற்றொரு இளைஞரான சோயல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  விபத்தில் உயிரிழந்த குமரன், தியாகராய நகரில் ஃபேன்சி ஸ்டோர் கடை நடத்தி வந்துள்ளார். நேற்றிரவு பணி முடித்து வீடு திரும்பும் வழியில் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குமரனுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவரது திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback