Breaking News

சாலையோரங்களில் வைக்கப்படும் ஒரு கொடி கம்பத்துக்கு ரூ.1,000 வசூலிக்க ஐகோர்ட் உத்தரவு

அட்மின் மீடியா
0

சாலையோரங்களில் வைக்கப்படும் ஒரு கொடி கம்பத்துக்கு ரூ.1,000 வசூலிக்க ஐகோர்ட் உத்தரவு



சாலை ஓரங்களில் தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைக்க ஒரு கம்பத்துக்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை 2025 ஏப்ரல் 28க்குள் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு 2025 ஜனவரி மாதம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. 

அதன் அடிப்படையில், அரசியல் கட்சிகள்,தனியார் அமைப்புகள் சார்பில் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மண்டல மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 

அதேபோல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக கொடிக்கம்பங்கள் அமைக்கும் போது, சாலையில் தார்கள் மீதும், சாலை நடுவில் உள்ள செண்டர் மீடியன் பகுதிகளில் கொடிக்கம்பங்கள் அமைக்க கூடாது,மூன்று நாட்களுக்கு மேல் கொடிக்கம்பங்களை வைத்திருக்க கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.

இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணையும், வழிகாட்டு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு சாலை செண்டர் மீடியன்களில் தற்காலிகமாக கொடி கம்பங்கள் அமைக்கப்படுகின்றன. 

அனுமதியின்றி கொடி கம்பங்கள் வைப்போருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். மேலும், சாலை ஓரங்களில் கொடி கம்பங்கள் வைக்க அனுமதி கேட்பவர்களிடம் ஒரு கொடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வசூலிக்க வேண்டும். இது அரசுக்கு வருவாயை ஈட்டிக் கொடுக்கும் எனச் சுட்டிக்காட்டினார். 

கொடி கம்பங்கள் அமைப்பது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அனைத்து துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, தலைமைச் செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் நீதிபதி உத்தரவிட்டார். அனுமதியின்றி தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 12 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback