பில்லி சூனியம் மாந்திரீகம் செய்வதாக மோசடி youtube போலி சாமியார் கைது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் சதிஷ் பாபு(31). அவர் திருவெறும்பூர் பேருந்து நிலையம் பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த ரகு(45) என்பவர் தான் சென்னையில் வசிப்பதாகவும், தன்னுடைய சொந்த மாநிலம் கேரளா என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் தனக்கு மாந்திரீகம் தெரியும், நான் பூஜைகள் செய்து உன்னை கோடீஸ்வரனாக்குகிறேன் எனவும் வரும் தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற செய்ய வைக்க முடியும் எனவும் ஆசை வார்த்தை கூறி ஒரு யூடியூப் சேனலில் மாந்திரீகம் தொடர்பான வீடியோக்களையும் காட்டி சதீஷை நம்ப வைத்துள்ளார்.
தொடர்ந்து சதிஷிடமிருந்து ரூ.3000 முன்பணம் பெற்று அருகில் உள்ள கோவிலில் பூஜை செய்து விட்டு வருவதாக அவர் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் சதீஷ் பாபு அக்கம்பக்கத்தில் தேடி உள்ளார். அப்பொழுது திருவெறும்பூர் மலைக்கோவில் பகுதியில் ரகு நின்று கொண்டு அங்கு வேறு ஒரு நபரிடம் இதே போல் கூறிக் கொண்டிருந்துள்ளார்.
இது குறித்து சதீஷ் பாபு ரகுவிடம் கேட்ட பொழுது உரிய பதிலளிக்காமல் தனக்கு மாந்திரீகம் தெரியும். அதன் மூலம் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ் பாபு இந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார். புகாரின் பேரில் திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் அடிப்படையில் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரகு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் PAPPALY VISHNU MAYA Channel என்ற பெயரில் யூடியூப் மூலம் இதுபோன்ற மாந்திரீக பூஜை செய்வது போன்ற வீடியோக்கள் மற்றும் அதற்கு ஆகும் செலவு என்று, பல வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்
மேலும் பாப்பாளி விஷ்ணு மாயா கருங்குட்டிசாத்தன் மாந்திரீகம். திருமணத்தடை குழந்தை பாக்கியம் கடன் தொல்லைகள் வியாபாரத்தில் லாபம் கொடுத்த பணம் வந்து சேர பேய் பிசாசு துஷ்ட சக்திகள் விலக சினிமாவில் சாதிக்க அரசியலில் சாதிக்க பில்லி சூன்யம் ஏவல் வைக்கப்படும்.எடுக்கப்படும் . நாகதோஷம் பித்ரு தோஷம் சத்ரு தோஷம் குலதெய்வவழிபாடு குடும்பப் பிரச்சினை தீராத வியாதிகள் வீட்டில் இறந்தவர்களை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வருதல் அரசாங்க வேலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு கணவன் மனைவி இடையே பிரச்சினை வழக்குகளில் வெற்றி பெற செய்தல் எதிரிகளால் வரும் பிரச்சனைகள் கேரளா முறைப்படி பூஜைகள் செய்து சரி செய்து தரப்படும். உங்கள் வீட்டிலோ கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள எங்கள் வம்சத்தின் கோவிலில் பூஜைகள் செய்து தருகிறேன்.சென்னை திருவல்லிக்கேணி எனது இல்லத்தில் ஒவ்வொரு நாளும் பகல் 12மணிக்கு மற்றும் மாலை 6மணிக்கு பூஜைகள் நடைபெறும்.அமாவாசை பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் மூலம் பல பிரச்சினைகள் சரி செய்து தரப்படும் என விளம்பரம் செய்துள்ளார் எனவும்
அதில் அரசு அதிகாரி காரில் செல்லும் போதே விபத்தில் இறக்க மாந்திரீகம் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு சுமார் 50 லட்சம் வரை செலவாகும் என்றும், ஒரு பூஜைக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவாகும் என்றும், 397 குட்டி சாத்தான்களை கொண்டு கேரளா மாநில மாந்திரீகத்தை கொண்டு நடத்தியதாகவும் வீடியோ வெளியிட்டு பலரை ஏமாற்றி உள்ளார் எனவும் விசாரனையில் தெரிய வந்தது.
Tags: தமிழக செய்திகள்
