தீ விபத்து தன்னை கொலை செய்வதற்காக நடந்த சதி ஏடிஜிபி பரபரப்பு புகார்! Kalpana Nayak IPS
தமிழ்நாடு காவல்துறை ஆட்கள் சேர்புப்பு விஷயத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த தன்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது என தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் அதிர்ச்சி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து இருக்கிறார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் விதிமீறல் வெளிப்படுத்தியதால் தனது உயிரைப் பறிக்க சதி நடந்ததாக தமிழகப் பெண் ஏடிஜிபி அதிகாரிபுகார் அளிக்கப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாகவும் தற்போது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக பணிபுரிந்து வரும் கல்பனா நாயக் தன்னை கொல்ல சதித்திட்டம் நடந்திருக்குமோ என்ற அடிப்படையில் புகார் அளித்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கல்பனா நாயக், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக கல்பனா நாயக் இருந்தபோது ஜூலை மாதம் 29ஆம் தேதி திடீரென எழும்பூர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் குறிப்பாக ஏடிஜிபி அறையில் தீ விபத்து நடந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
முதற்கட்டமாக ஏசி மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தீ விபத்து நடந்த நிலையில் அறையில் ஏடிஜிபி கல்பனா நாயக் இல்லை
இந்த நிலையில் தனது அலுவலகத்தில் நடந்த தீ விபத்து என்பது தன்னை கொல்ல நிகழ்த்தப்பட்ட நாடகம் அல்லது சதி என பரபரப்பு குற்றச்சாட்டை புகாரில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அந்த புகாரில் பாரபட்சம் இன்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் தேர்வில் பட்டியலில் இடஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு இருப்பதாக தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பான செய்திகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பாணிசாமி, தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் கடும் கண்டனத்தையும் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது."சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்" என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது.
தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது ,இந்த செயலுக்கு திரு. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்?ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது, திரு.@mkstalin, தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி!
இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும்.உடனடியாக ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
