தமிழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பள்ளி ஆசிரியர்களின் கல்வி சான்றுகள் ரத்து செய்யப்படும் அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பள்ளி ஆசிரியர்களின் கல்வி சான்றுகள் ரத்து செய்ய பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை
தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 60-ம் ஆண்டு வைர விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அரசு பள்ளியின் 60-ம் ஆண்டு மலரை வெளியிட்டார்.
இதையடுத்து, அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில்:-
ஒவ்வொரு அரசு பள்ளியிலும், மாணவர் மனசு என்னும் பெட்டி வைத்துள்ளோம். எனினும், மாணவர்களுக்கு ஏற்படும் அச்ச உணர்வு காரணமாக அவர்களுக்கு நடக்கும் சில சம்பவங்களை வெளியில் சொல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது.
அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் 800 மருத்துவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அப்படி இருந்தும், அரசு பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த சம்பவத்தின் உண்மை தன்மைகளை விசாரணை செய்து, அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
அதையும் தாண்டி, சம்பந்தப்பட்ட நபர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். இரும்பு கரம் கொண்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இனி அது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம், மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை எந்த ஒரு பயமும் இல்லாமல் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதன்படி கடந்த, 10 ஆண்டுகளில் தமிழகம் முழுதும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியர்கள், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை அறிக்கையாக அளிக்கும்படி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
