செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியாளர் உயிரிழந்தால் வீட்டின் உரிமையாளர் தான் இழப்பீடு வழங்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வீட்டு செப்டிக் டேங்கில் சுத்தம் செய்யும்போது உயிரிழப்பு நேர்ந்தால், வீட்டின் உரிமையாளர்தான் இழப்பீடு வழங்க வேண்டும் -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வீட்டு கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் உயிரிழந்தால், வீட்டின் உரிமையாளர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனித மலத்தை மனிதா்களைக் கொண்டு அள்ளுவது 2013ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகவும், இதை மீறுவோருக்கு இரண்டு வருட கடுங்காவல் அல்லது ரூபாய் ஒரு லட்சம் அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் விநாயகபுரத்தை சேர்ந்தவர் யோகேஷ்பாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்களது பகுதியில் கழிவு நீர் இணைப்பு இல்லை. பலமுறை சென்னை மாநகராட்சிக்கு மனுக்கள் அனுப்பியும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதையடுத்து, எனது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டினேன். இந்த செப்டிக் டேங்க் நிறைந்துவிட்டால் கழிவுகளை அகற்றுவதற்காக மாநகராட்சியிடம் கோரிக்கை வைப்போம். மாநகராட்சி ஊழியர்களும் கழிவு நீரை அகற்றுவார்கள். அந்த வகையில் கடந்த 2013 செம்டம்பர் 30ம் தேதி எனது வீட்டின் செப்டிக் டேங்க் நிறைந்ததால் மாநகராட்சியை தொடர்பு கொண்டேன். இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் 3வது மண்டல ஊழியர்கள் கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, முனுசாமி என்ற ஊழியர் செப்டிக் டேங்கில் இறங்கியுள்ளார்.
முனுசாமி டேங்கில் இருந்த வாயு தாக்கி இறந்துள்ளார். மற்ற ஊழியர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், முனுசாமியை காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து, பணியில் இருந்து எனக்கு தகவல் வந்தது. உடனடியாக நான் வீட்டுக்கு சென்று உடனடியாக 3வது மண்டல அதிகாரிக்கு தகவல் கொடுத்தேன். மேலும், முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.55 ஆயிரம் இழப்பீடாக கொடுத்தேன்.
இந்த நிலையில், முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை வழங்குமாறு சென்னை மாநகராட்சி 3வது மண்டல அதிகாரி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எங்கள் பகுதி முழுவதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால்தான் செப்டிக் டேங்க் கட்டியுள்ளோம். முனுசாமியின் இறப்பு துரதிஷ்டவசமானது. அதனால்தான் எனது சொந்த பணத்தை அவரது மனைவியிடம் கொடுத்தேன். இந்த நிலையில் முழு இழப்பீடையும் தருமாறு மண்டல அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது விதிகளுக்கு முரணானது. எனவே, மண்டல அதிகாரியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார். உரிய விதிகளின் அடிப்படையில்தான் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் கொடுத்துள்ளது. எனவே, அந்த தொகையை மனுதாரரிடம் வசூலிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.
Tags: தமிழக செய்திகள்
