மணப்பாறையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 4 பேர் கைது
அட்மின் மீடியா
0
4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கைது
.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான பள்ளியின் மீது கற்கள், கட்டையை வீசி பொதுமக்கள் சூறையாடிய நிலையில் பள்ளி தாளாளரின் கணவர் உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பள்ளி தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமாரை (54) போலீசார் கைது செய்தனர்.
உறவினர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் தாளாளர் சுதா உள்பட பள்ளி நிர்வாகிகள் 4 பேரை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு மாணவியிடம் பள்ளியின் அறங்காவலரும் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து மாலையில் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி தாளாளரின் கணவர் வசந்தகுமார் உள்பட பள்ளி நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெற்றோர் , உறவினர்கள், பொதுமக்கள் பள்ளி பள்ளிக்கு சென்று வசந்தகுமாருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன் வசந்த குமாரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல், கட்டைகளை எடுத்து பள்ளி மீது வீசி எறிந்தனர்.இதில் வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரையும் அடித்து உதைத்து தலைகீழாக கவிழ்த்தனர்.
இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் செல்வநாகரெத்தினம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து நள்ளிரவில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மராட்ச்சி, செழியன், சுதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மணப்பாறையில் நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags: தமிழக செய்திகள்
