Breaking News

காசாவில் போர் நிறுத்தம் ஐ.நா.வில் தீர்மானம் - இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துமா ?

அட்மின் மீடியா
0

கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.


இஸ்ரேல் தாக்குதலில் 7,028 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 2,900 பேர் சிறுவர்கள் என்றும் கூறியுள்ள ஹமாஸ் 6,743 பேரின் பெயரை வெளியிட்டுள்ளது. இன்னும் 281 பேரின் உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.அதேநேரத்தில் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், உலக நாடுகள், இந்த தாக்குதலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றன.

அதில் பெரும்பாலான நாடுகள் காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன

இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தரை வழி தாக்குதலும் நடத்தப் போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. 

இந்த சூழலில் உடனடியாக காசாவில் மனிதாபிமான போர்நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என ஐ.நா.வின் பொதுச் சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானத்தில், அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகளால் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கா ஆதரவுடன் கனடா, தீர்மானத்தில் மாற்றம் கொண்டு முயற்சித்தது. அது நிராகரிக்கப்பட்டது.

இறுதியாக 193 உறுப்பினர்களை கொண்ட சபையில் இந்த தீர்மானத்திற்கு 120 உறுப்பு நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும், இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்களிக்காமலும் தவிர்த்தன. இதனையடுத்து இந்த தீர்மானம் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்கள் காசாவுக்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இந்த தீர்மானம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback