2023 ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு.. 8 ம்தேதி தச்சங்குறிச்சியில் அதிகாரபூர்வ அறிவிப்பு Thachankurichi Jallikattu
தமிழகத்தில் 2023ல் முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தான் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடவடிக்கைகளை சரியாக செய்யவில்லை எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்
தச்சங்குறிச்சியில் பொதுமக்கள், விழாக்குழுவினருடன் அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டல் முறைகளில் விடுபட்டவைகளை நிறைவேற்றிவிட்டால் 8-ந் தேதி (அதாவது நாளை) ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் உறுதியளித்தார். இதற்கு விழாக்குழு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டமாக ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இந்த ஆண்டும் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதமாக ஜல்லிக்கட்டு குழுவினர் மாவட்ட நிர்வாகம், கால்நடை துறையின் அனுமதி கிடைத்தது. இதைடுத்து ஜல்லிக்கட்டு குழுவினர் அரசு கூறி இருந்த கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த முன்னேற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தச்சங்குறிச்சியில் ஜனவரி 8 ம் தேதியான நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 2023ல் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்