ஒற்றை தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்... ஓபிஎஸ் பேட்டி முழு விவரம்...
ஜூன் 23-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என மாவட்ட செயலாளார்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுப்பெற்றுள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனைகளை வழங்கினர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில்
ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்:-
அதிமுகவில் தொண்டர்களால் தேர்தல் மூலமாகவே பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்பது விதி. தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது
எம்ஜிஆர். ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது. அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்தோம்.தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பதற்காகவே நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டோம். எனக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. அது அதிகாரமற்ற பதவி. இருந்தபோதும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த பதவியை ஏற்றுக்கொண்டேன்.
இப்போது ஒற்றைத் தலைமை பேச்சு ஏன் எழுந்தது என்று எனக்கே தெரியவில்லை. 6 ஆண்டு காலம் நன்றாக கட்சியை வழிநடத்திச் சென்ற நேரத்தில் இந்த பிரச்சனை எழுந்தது சரியல்ல. ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என பொதுக்குழுவில் முடிவு செய்திருந்தோம். பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவுக்கு கொடுத்த பதவியில் யாரும் வரக்கூடாது. மீண்டும் ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் ஆகும்.
தொண்டர்களிடமிருந்து என்னை பிரிக்க முடியாது, அதிமுகவிலிருந்து என்னை ஓரங்கட்ட முடியாது. இன்றைய கால கட்டத்தில் இரட்டை தலைமை நன்றாக சென்று கொண்டுள்ளது. இந்த நேரத்தில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தேவைதானா? எதிர்க்கட்சியாக ஒற்றுமையோடு பணியாற்றி ஆளுங்கட்சியாக வேண்டும், எந்தவித அதிகார ஆசையும் எனக்கு இல்லை.தொண்டனாகவே பணியாற்றி வருகிறேன்
விட்டுக்கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. தொண்டர்கள் மீது சிக்கலான கருத்துகளை திணித்து அவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பொதுக்குழுவை சுமூகமாக நடத்திவிட்டு, அடுத்த கட்டம் குறித்து 14 பேர் கொண்ட குழு பேசி முடிவு செய்யட்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் நான் இருக்க வேண்டுமா? வேண்டாமா என்பதை தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் கட்சியிலிருந்தும் பொறுப்பிலும் விலக யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது”
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உடனிருந்து பணியாற்றியவர்கள், சற்று விலகி இருப்பவர்கள் இணைந்து இன்று இயக்கத்தை பலப்படுத்த வேண்டிய நேரம் இது. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு எழ வேண்டுமென்றால் இயக்கத்தில் நீண்ட காலமாக பணியாற்றிய தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்க வேண்டும் எனக் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்