கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 வங்கிகணக்கில் நேரடியாக வழங்கப்படும் ஏற்பாடுகள் தயார்- அமைச்சர் அறிவிப்பு
மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மாதம் 1000 ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.
இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவித்திருந்தார்
இந்நிலையில் சென்னையில் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர்
1 முதல் 5-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார்.
அதேபோல் மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்படும். இவ்வாறு கீதாஜீவன் தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்