ஆகஸ்டு 15 அன்று கிராம சபை கூட்டம் நடத்த தடை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடை பஞ்சாயத்து தலைவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சிகளில் குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, காந்தி பிறந்தநாள் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும். அன்றைய தினம் கிராமத்தின் வரவு -செலவு கணக்குகள் முன்வைக்கப்படுவதோடு, மக்கள் தங்கள் பகுதி கோரிக்கையையும் வலியுறுத்துவார்கள்.
எனினும் கொரோனா பரவல் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்த நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் பிரவீன் நாயர், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், கிராம சபைக் கூட்டம் நடைபெறாததை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்