கிரெடிட் கார்டு போனஸ் பாயிண்ட் தருவதாக கூறி 57 ஆயிரம் பணத்தை ஏமாந்தவரின் பணத்தை மீட்ட சைபர் போலிசார்
சென்னை, புதுப்பேட்டை, கொய்யாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர், வரபிரசாத், 38; தனியார் நிறுவன ஊழியர். அவருக்கு கடந்த 18ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், தான் வங்கி மேலாளர் என்றும், கிரெடிட் கார்டு விபரங்களை தெரிவித்தால், போனஸ் பாயின்ட் தருவதாகவும் கூறி உள்ளார்.
இதை உண்மை என நினைத்த வரபிரசாத், கிரெடிட் கார்டின் முழு விபரம், ஓ.டி.பி., எண்ணையும் கூறியுள்ளார். சிறிது நேரத்திலேயே அவரது கிரெடிட் கார்டு பயன்படுத்தி, 87 ஆயிரத்து, 631 ரூபாய்க்கு, மர்ம நபர், ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவல்லிக்கேணி சைபர் கிரைம் போலீசார், விசாரணை மேற்கொண்டதில், 'மொபிவிக்' தளத்தில் பண பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது. சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு, போலீசார், வரபிரசாத்தின் கணக்கில் பணத்தை திருப்பி கொடுக்கும்படி பரிந்துரை கடிதம் அனுப்பினர்.அதன்படி, வரபிரசாத்தின் வங்கி கணக்கில், 57 ஆயிரத்து, 81 ரூபாய் செலுத்தப்பட்டது. மீத பணத்தை மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பணத்தை மீட்டதால், மகிழ்ச்சி அடைந்த வரபிரசாத், சைபர் கிரைம் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்