நான் தலைமறைவாக இருக்கின்றேனா: தப்லீக் ஜமாஅத் தலைவர் மௌலானா சாத் அவர்களின் முதல் பேட்டி
அட்மின் மீடியா
0
உலகம் முழுவதும் பரவி வரும் கொடிய நோயான கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச்.24ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ்ஸில் மார்ச் முதல் வாரத்தில் இருந்து நடத்தப்பட்ட தப்லீக் ஜமாத் மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றதாகவும் அவர்களுக்கு அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
இதைத் தொடர்ந்து தடையை மீறி கூட்டம் கூட்டியதாக தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மௌலானா முஹம்மது சாத் அவர்களின் மீது மார்ச்.31ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மீது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழும் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் மௌலானா சாத் அவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் IANS Global என்ற ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டியை உங்களுக்காக தமிழில் இங்கு மொழிபெயர்த்து தருகின்றோம்.
கேள்வி 1 : உங்கள் மீது வழக்கு போடப்பட்டதும் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் நீங்கள் தலைமறைவாகி விட்டதாகவும் அதனால்தான் உங்களின் மீது புதிதாக ஒரு வழக்கும் (IPC 304) சேர்க்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்: "நான் தலைமறைவாக இருக்கிறேன் எனச் சொல்வது தவறான குற்றச்சாட்டாகும். மருத்துவர்களின் ஆலோசனையின்படி, நான் இங்கு டெல்லியில் தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். இந்த விஷயம் என் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினருக்கும் நன்றாகவே தெரியும். இந்த சூழ்நிலையிலும் விசாரணை அதிகாரிகள் எனக்கு அனுப்பிய இரண்டு நோட்டீஸ்களுக்கு நான் பதில் அளித்துள்ளேன். மேலும் அவர்களின் அறிவுறுத்தலின்படியே கொரோனா பரிசோதனையும் செய்து கொண்டுள்ளேன். பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கிறோம். மேலும் இதேசமயத்தில் தனிமைப் படுத்தப்படாத எனது மகன் முன்னிலையில் எனது வீட்டில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. நான் தலைமறைவாகி இருந்தால் இவையெல்லாம் எப்படி நடந்திருக்க சாத்தியமாகும்?
கேள்வி 2 : இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மார்ச்.23ல் இருந்து ஜனதா கர்ஃபியு மற்றும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஊர் திரும்ப வழியில்லாமல் மர்கஸிலேயே தங்கவைக்கப் பட்டிருந்தார்கள் என்பதை அந்தப் பகுதி காவல் நிலையத்திற்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட்டிற்க்கும் நீங்கள் தெரியப்படுத்தியது உண்மையா?
பதில்: ஆம், மார்ச்.24ம் தேதி எங்களது மர்கஸில் இருந்து ஆறு நபர்கள் கொண்ட குழு ஒன்று நிஜாமுத்தீன் காவல் நிலையத்திற்குச் சென்று SHO அவர்களைச் சந்தித்து, மர்கஸில் ஏற்பட்டிருந்த சூழலை விளக்கிக் கூறி, அங்கு தங்க வைக்கப்பட்டவர்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு எவ்வாறு அனுப்பி வைப்பது என்று ஆலோசனை கேட்க முயன்றார்கள். பின்னர் அதுகுறித்து ஒப்புதலுடன் கூடிய ஒரு விளக்கமான கடிதத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள். அதிலிருந்து மர்கஸில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திக் கொண்டே தான் இருந்தோம். எங்களது மர்கஸின் நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையானவையும் எளிதில் அணுகக்கூடியதும் ஆகும்.
கேள்வி 3 : அரசு நிர்வாகம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டு இப்போது உங்களின் மீது பழி போடுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
பதில்: நாங்கள் யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. இது ஒரு அசாதாரணமான சூழலாகையால் நாங்களோ, அரசாங்கமோ யாரும் இதுகுறித்து முழுமையாக அறிந்திருக்கவில்லை. இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையும் அனுமதியும் கேட்டு கொண்டே தான் இருந்தோம். அதற்கான எல்லா ஆதாரங்களும் இருக்கிறது. மேலும் சூழ்நிலை கருதி நாங்களே வாகன ஏற்பாடுகள் செய்து பயணம் செய்ய அனுமதி கோரினோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. சுகாதாரத் துறை அதிகாரிகள் மார்ச்.25ம் தேதிதான் மர்கஸை பார்வையிட வந்தார்கள். அதன்பிறகு தினந்தோறும் வரலானார்கள். இந்த நடவடிக்கைகளை முன்னரே எடுத்திருந்தால் இத்தகு சூழலை தவிர்த்திருக்கலாம்.
கேள்வி 4 : தப்லீக் ஜமாத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று வெகுஜன மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உங்களின் ஜமாத்தின் நடவடிக்கைகள் குறித்து உங்களால் விளக்க முடியுமா?
பதில்: இந்த மர்கஸ் உலக அளவில் தப்லிக் ஜமாத்தின் தலைமையிடமாகும். இது ஒரு சமூக- ஆன்மீக இயக்கமாகும். உலகளவில் நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுடனோ, அரசு அல்லது தனியார் நிறுவனங்களுடனோ தொடர்புடையவர்கள் கிடையாது. முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மதபோதனைகளை அளித்து வரும் எங்களது இந்த பணிகள் 1926 முதலே நடைபெற்று வருகின்றது. தனிமனித ஒழுக்கம், ஆன்மீக கற்றல் போன்றவற்றை நாம் பெறுவதன் மூலம் ஒரு நேர்மையான, சிறந்த மனிதராக வாழ வழிவகுக்கும் அடிப்படைகளையே நாங்கள் போதனை செய்து வருகிறோம்.
உலகளவில் எண்ணிலடங்காத உறுப்பினர்கள் கொண்ட தப்லீக் ஜமாத் ஒரு மாபெரும் சீர்திருத்த இயக்கமாகும். நாங்கள் ஒருபோதும் விளம்பரத்தையோ, புகழையோ விரும்பியதில்லை. நாங்கள் எங்கள் உள்ளங்களை சீர்படுத்தி கொள்வதற்காக மட்டுமே இந்தப் பணிகளைச் செய்கிறோம், இதற்கான வெகுமதியை எங்கள் இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்கிறோம்.
கேள்வி 5 : "மரணிக்க சிறந்த இடம் பள்ளிவாசல்தான்" என்று நீங்கள் சொன்னதாக ஒரு ஆடியோ வலம் வருகிறது. இதன் காரணமாகவே தப்லீக் ஜமாத்தினர் பள்ளிவாசல்களில் மறைந்து கொண்டார்கள் என்றும் சொல்லப்படுகிறதே.. அது பற்றி
பதில்: ஆம்.. நான் பேசிய நீண்ட சொற்பொழிவு ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது தான் அந்த குறிப்பிட்ட வார்த்தை. ஒரு மதபோதகராக, ஆன்மீக வழிகாட்டலின் அடிப்படையிலேயே எனது சொற்பொழிவுகள் இருக்கும், ஆகையால் நான் கூறியதன் பொருளாவது "மரணத்தின் நேரத்தில் எனது இறுதி மூச்சு பிரியும் இடம் இறைவனின் ஆலயமான பள்ளிவாசல் தான்" என்று கூறினேன். அதே நேரத்தில் இது போன்ற அசாதாரணமான சூழலில் பள்ளிவாசல்களில் 3-4 நபர்கள் மட்டுமே சபையாக அல்லாமல் தனித்தனியாக இருப்பது போதுமானது என்றும் நான் கூறினேன். எனது இந்த கருத்து அந்த சொற்ப்பொழிவில் பங்குபெற்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதே நேரத்தில் இந்த தொற்று நோயை ஒழிக்க கடுமையாக உழைத்துவரும் சுகாதாரத்துறையினர் வழங்கும் அறிவிப்புகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் நான் வலியுறுத்தினேன். ஆனால் ஊடகங்களோ எனது முழுபேச்சையும் தவிர்த்துவிட்டு அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் எடுத்து தவறான அர்த்தத்தில் வெளியிட்டதையும் அறிந்தேன்.
கேள்வி 6 : ஒரு மறைமுகமான மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகும் உங்களின் மர்கஸ் மார்ச் 13 -15 வரை ஏன் நிகழ்ச்சியை நடத்தியது?
பதில்: பொதுவாகவே மர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலத்திங்களில் இருந்தும் குறைந்தபட்சம் 2000 பேராவது வருவார்கள். இவர்கள் அனைவரும் ஏற்கனவே தங்களது பயணங்களுக்கான முன்பதிவுகளுடனும் முன்னேற்பாடுகளுடனும் தான் வருவார்கள். ஒருவேளை அதிகாரிகளிடம் இருந்து உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்துவதற்கு அறிவுறுத்தலோ அல்லது ஆணைகளோ வந்திருந்தால் நாங்கள் உடனடியாக அதை செய்திருப்போம். மார்ச் 23ல் ஊரடங்கு கட்டுப்பாடு அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே நாங்களும் அனைத்து நிகழ்ச்சியையும் உடனடியாக நிறுத்திவிட்டோம்.
கேள்வி 7 : தப்லீக் ஜமாத்தைச் சார்ந்தவர்களுக்கு உலகளவில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகிறதே.. அதைப் பற்றி??
பதில்: இது மிகவும் தவறான கேள்வியாகும். மேலும் இந்தக் கேள்வியானது நமது நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாட்டை குறைத்து மதிப்பிடும் செயலாகும். தப்லீக் ஜமாத் அமைப்பை லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பின்பற்றுகிறார்கள். நாங்கள் இங்கு எந்த கூட்டம் நடத்தினாலும் அதை இந்தியாவில் உள்ள புலனாய்வு அமைப்புகளுக்கு தெரியாமல் நடத்திட முடியாது. அவர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பித்துச் செயல்பட முடியாது. உங்களின் கருத்துப்படி நாங்கள் தீவிரவாத தொடர்பில் இருந்திருந்தால், இந்நேரம் அதிகாரிகள் மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்திருப்பார்கள். தப்லீக் ஜமாத் அமைப்பும், வன்முறையும் நேர் எதிரானது. எங்களது அமைப்பினர் எந்தவொரு அரசியல் அல்லது சமூக இயக்க செயற்பாடுகளில் கூட பங்கெடுக்க மாட்டார்கள். நாங்கள் இறைத்தூதர்களை மட்டுமே பின்பற்றுபவர்கள், மேலும் எல்லா மனிதர்களிடமும் அன்பு காட்டுபவர்கள். நமது பாதுகாப்பு அமைப்பினரும் இதை நன்றாகவே அறிவார்கள். பத்திரிக்கைகளும் ஊடகத்துறையினரும் தாங்கள் விரும்பியதை சொல்லிக் கொள்ளட்டும்.
கேள்வி 8 : தப்லீக் ஜமாத் ஏன் பத்திரிகைகளின் இதுபோன்ற முரண்பாடான செய்திகளுக்கு விளக்கம் தந்து பேட்டி அளிக்கவில்லை?
பதில்: எங்கள் ஜமாத்தின் வரலாற்றில் இதுவரை நாங்கள் எந்த மீடியாவுக்கும் பேட்டி கொடுத்தும் இல்லை, விளம்பரங்கள் தேடியதும் இல்லை. அதனால் தான் பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எங்களைப் பற்றி தெரிவதில்லை. எந்த விமர்சனத்திற்கும் நாங்கள் முன் வந்து பதில் கூறுவதில்லை. ஆனால் நாங்கள் எப்போதும் அரசு அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு அளித்தே வந்துள்ளோம். ஆனால் எழுத்தாளர்களும் விமர்சனம் செய்பவர்களும் அவர்களின் கருத்தை சொல்லலாம். ஆனால் இந்த சமூகத்திற்கு எங்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும்.
கேள்வி 9 : நீங்கள் எப்போது காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போகிறீர்கள்?
பதில்: நான் ஏற்கனவே குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். அவர்களிடமிருந்து பதில் வரும்போது நான் நிச்சயமாக ஒத்துழைப்பு தருவேன்.
கேள்வி 10 : ஊடகங்கள் சரியான ஆதாரங்களுடன் எதையும் வெளியிடவில்லை என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: நான் முன்னரே கூறியடி நாங்கள் ஒரு போதும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததில்லை, அதேபோல் எங்களுக்கென்று எந்த சமூக வலைதள ஊடகங்களும் இல்லை. எங்களை பற்றி ஆதாரமில்லாததை ஊடகங்கள் பரப்பியது என்று கேள்விபட்ட போதிலும் ஒருபோதும் நாங்கள் குழப்பமடையவில்லை. ஆதாரமில்லாத பதிவுகளை வெளியிட்டதால் ஊடகங்கள் தான் தனது நம்பகத்தன்மையை மக்களிடம் இழக்கின்றன. ஊடகங்கள் உண்மையான செய்தியை தான் வெளியிடுகிறதா என்பதை சரி பார்க்க மாநில நிர்வாகத்திற்கு தான் முழு பொறுப்பும் உள்ளது.
கேள்வி 11 : உங்கள் மக்கள் சொல்கிறார்கள், மர்கஸ் சுதந்திரமான மற்றும் தைரியமான ஊடகங்களை நம்புவதாகவும் . தப்லீக் ஜமாத் பெங்களுருவை சார்ந்த பிரதான சட்ட நிறுவனத்தையும், Mubin Farooqui in Malerkotla, Sangrur, அவர்களை உண்மையை அடிப்படையாக கொண்டு எழுதும் செய்தி ஊடகமாக அங்கீகரிக்கின்றதா?
பதில்: இல்லை, இந்த வழக்கிற்காக வாதாடுவதற்கு நான்கு நபர்களை கொண்ட வழக்கறிஞர்கள் மட்டுமே தேர்வு செய்துள்ளோம்
கேள்வி 12 : உங்களுக்கு எதிராக தப்லீக் ஜமாத்திற்கு எதிராக சதி வேலை நடக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: எனக்கு தெரியவில்லை, இதை சதி வேலை என்று எடுத்துக் கொள்ளலாமா என்று? கடந்த காலத்தில் இதுபோன்ற ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஒருவரை குற்ற படுத்தி குற்றவாளி என ஊடகம் சொலியது. ஆனல் பின்பு நீதிமன்றம் குற்றவாளி இல்லை என்று விடுவித்து பின்பு அவர் செய்த செயலை பாராட்டியது..
கேள்வி 13 : உங்கள் ஜமாத்தை சார்ந்தவர்களுக்கு ஏதேனும் கருத்து சொல்ல விரும்புகிறீர்களா?
பதில்: நாங்கள் நமது நாட்டின் நீதித்துறையை நம்புகிறோம், மேலும் உண்மை நிச்சயமாக வெளியே வரும். மர்க்கஸே நிஜாமுதீன் ஒரேயொரு விஷயத்தை மட்டுமே முன்மொழிகிறது அது தான் அன்பு, அமைதி மற்றும் சகோதர்த்துவம்.
இறுதியாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒன்றை தெரிவித்து கொள்கிறேன், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த தப்லீக் ஜமாத்தினர் தனது பிளாஸ்மாவை கொரோனா பாதிக்கப்பட்டிருக்கும் எந்த மதம் பாராமல் அனைவருக்கும் கொடுத்து உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதனால் மற்றவர்களும் பூரண குணம் அடைவார்கள். ஏனென்றால் நாம் அனைவரும் நமது முதல் தந்தை ஆதாமின் மக்களே.
Thanks To: IANS Global
Source:http://www.reendexnews.com/2020/04/tablighi-and-violence-are-the-very-antithesis-of-each-other-maulana-saad-interview/
Tags: மார்க்க செய்தி