Breaking News

நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை

அட்மின் மீடியா
0

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும், இன்று(மார்ச் 20) அதிகாலை 5.30 மணிக்கு, திஹார் சிறையின் 3ம் எண் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.



வழக்கு கடந்த வந்த பாதை:

டிச., 16, 2012: டில்லியில் மருத்துவ மாணவி, 'நிர்பயா' தன் நண்பருடன் இரவில், தனியார் பஸ்சில் பயணம் செய்த போது, ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து துாக்கி வீசப்பட்டார்; நண்பரும் தாக்கப்பட்டார்.


டிச., 17: டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் நிர்பயா சேர்ப்பு.


டிச., 17: பஸ் டிரைவர், ராம் சிங், அவரது சகோதரர், முகேஷ் சிங், ராஜஸ்தானில் கைது. வினய் சர்மா, பவன் குப்தா, 17 வயது சிறுவன், 
டில்லியில் கைது. அக் ஷய் குமார் சிங், அவுரங்காபாதில் கைது.


டிச., 21: சப்தர்ஜங் மருத்துவமனையில், மாஜிஸ்திரேட்டிடம், நிர்பயா வாக்குமூலம்.

டிச., 26: குற்றவாளிகளை துாக்கிலிட வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டம்.

டிச., 27: நிர்பயா மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

டிச., 29: சிகிச்சை பலனின்றி நிர்பயா, அதிகாலை, 2:15 மணிக்கு உயிரிழந்தார். பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் பார்லிமென்டில் தாக்கல்.

ஜன., 3, 2013: பாலியல் பலாத்காரம், கொலை, கடத்தல், ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில், ஐந்து குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு. ஆறு பேரில், மைனர் குற்றவாளி வழக்கு மட்டும் சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றம்.

ஜன., 17: டில்லி சாகேட் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது.

மார்ச் 11: திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான ராம் சிங் துாக்கிட்டு தற்கொலை. மற்ற ஐந்து பேர் மீதான விசாரணை தொடர்ந்தது.

ஆக., 31: குற்றம் நிரூபிக்கப்பட்ட மைனர் குற்றவாளிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை.

செப்., 10: குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என, நீதிமன்றம் தீர்ப்பு. 13 பிரிவுகளில் இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டது.

செப்., 13: நால்வருக்கும் மரண தண்டனை வழங்கி, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

ஜன., 3, 2014: சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது டில்லி உயர் நீதிமன்றம்.

ஜூன் 2: குற்றவாளிகள் இருவர், இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

ஜூலை 14: குற்றவாளிகளின் துாக்கு தண்டனைக்கு இடைக்கால தடை.

டிச., 2015: மைனர் குற்றவாளியை விடுவிக்கக் கூடாது என, பா.ஜ.,வின் சுப்பிரமணியன் சாமி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு.

டிச., 18: இம் மனுவை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டிச., 20: மூன்று ஆண்டு சிறை தண்டனை முடிந்ததால், மைனர் குற்றவாளி விடுதலை.

ஏப்., 3, 2016: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்.

மே 5, 2017: அக் ஷய் குமார் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்த டில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

நவ., 13: தீர்ப்பை எதிர்த்து, அக் ஷய் குமார் தவிர, மற்ற மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு.

ஜூலை 9: சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அக்., 29, 2019: கருணை மனு தாக்கல் செய்ய, குற்றவாளிகளுக்கு திஹார் ஜெயில் நிர்வாகம், ஏழு நாள் காலக்கெடு விதித்தது.

நவ., 8: டில்லி அரசிடம் வினய் சர்மா கருணை மனு.

நவ., 30: இதை தள்ளுபடி செய்த டில்லி உள்துறை அமைச்சர், டில்லி துணைநிலை கவர்னருக்கு மாற்றினார்.

டிச., 2: கவர்னரும் மனுவை தள்ளுபடி செய்து, டில்லி அரசு முடிவெடுக்க அனுமதி.

டிச., 6: கருணை மனுவை, உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு மாற்றியது. மனுவை தள்ளுபடி செய்ய, டில்லி அரசு பரிந்துரை.

டிச., 10: அக் ஷய் குமார் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு.

டிச., 18: மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய உத்தரவு.

ஜன., 7, 2020: நான்கு குற்றவாளிகளையும், ஜன., 22 காலை, 7:00 மணிக்கு துாக்கிலிட, திஹார் ஜெயில் நிர்வாகத்துக்கு, டில்லி நீதிமன்றம்நோட்டீஸ்.

ஜன., 17: முகேஷ் சிங் கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் நிராகரிப்பு.

ஜன., 30: துாக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய அக் ஷய் குமார் மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிப்., 1: வினய் சர்மா கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிப்பு.

பிப்., 17: நான்கு பேரையும், மார்ச், 3ம் தேதி காலை, 6:00 மணிக்கு துாக்கிலிட, டில்லி நீதிமன்றம் புது, 'வாரன்ட்' பிறப்பித்தது.

மார்ச் 5: பவன் குப்தா கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிப்பு.

மார்ச் 19: முகேஷ் சிங் மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு. நான்கு பேரையும் இன்று காலை, 5:30 மணிக்குள் துாக்கிலிட உத்தரவு. நள்ளிரவில் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

மார்ச் 20: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவசர வழக்காக அதிகாலை 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ய, 4 பேரின் தூக்கும் உறுதி செய்யப்பட்டது.

மார்ச் 20, அதிகாலை 5.30 மணி: குற்றவாளிகள் 4 பேரும் திஹார் சிறையின், 3ம் எண் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback