Breaking News

ஓட்டு எண்ணிக்கை நடைமுறை என்ன

அட்மின் மீடியா
0
ஓட்டு எண்ணிக்கை நடைமுறை களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.அதன் விபரம்:


நாளை காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டு களை எண்ணும் பணி துவங்கும். ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதிக்குரிய ஓட்டு எண்ணும் மையத்தில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.


அங்கு தபால் ஓட்டு எண்ணிக்கை முடிந்த 30 நிமிடங்களுக்கு பின் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை துவங்கும். மீதமுள்ள ஐந்து தொகுதிகளுக்கானமையங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8:00 மணிக்கு துவங்கும்



இடைத்தேர்தல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளில் தபால் ஓட்டுகள் எண்ணிய பின் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை காலை 8:30 மணிக்கு துவங்கும்.

ஓட்டுப்பதிவு இயந் திரத்தில் உள்ள கட்டுப்பாட்டு கருவியில் பேட்டரி இயங்காவிட்டால் மாற்று பேட்டரி பொருத்தப்பட்டு எண்ணிக்கை தொடரும்.

மின்னணு இயந்திரங்களில் உள்ள ஓட்டுச்சீட்டுகள் எண்ணி முடித்த பின்னரே ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். ஒரு சுற்று முடிவு வெளிவர 30 நிமிடம் ஆகும்.

ஒரு மையத்துக்கு 14 மேஜை, ஒரு மேஜைக்கு ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்ட் என்கிற கணக்கில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஏஜெண்டுகள் காலை உள்ளே சென்றவுடன் வாக்கு எண்ணிக்கை முடியும்வரை வெளியே வர முடியாது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்.

ஓட்டு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் இருப்பார்கள். வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்கு எண்ணும் இயந்திரங்களின் எண், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் எண் ஆகியவற்றைக் காட்டிய பிறகே ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக இந்த முறை ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் சேர்த்து எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் ஒரு சட்டப்பேரவைக்கு 5 ஒப்புகைச் சீட்டு எந்திரம் என்ற வகையில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் (6 சட்டப்பேரவையை உள்ளடக்கிய தொகுதி என்றால்) 30 வி.வி.பி.ஏ.டி. இயந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும்.

ஒவ்வொரு வி.வி.பி.ஏ.டி. இயந்திரத்துக்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்படும். இந்தத் தேர்வை வீடியோ படம் எடுப்பார்கள்.

இதனால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் வி.வி.பி.ஏ.டி. இயந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் சற்று காலதாமதமாகவே அறிவிப்பு வெளியாகும்.

Give Us Your Feedback