Breaking News

மதுரை தனிஷ்க் நகைக்கடைகொள்ளை வழக்கு: பிரபல இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி கைது !

அட்மின் மீடியா
0

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பாலை பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி என்ற இளம்பெண் மற்றும் பட்டதாரி இளைஞரின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரைத் தனிப்படைப் போலீசார் கைது செய்துள்ளனர்.



மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பாலை பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி என்ற இளம்பெண் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை தனிப்படைப் போலீசார் கைது செய்துள்ளனர்

மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் தொடங்கப்பட்ட தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில், கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் மர்ம நபர், அங்கிருந்த ஏராளமான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். இந்தச் சம்பவம் மதுரை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதற்கட்ட விசாரணையில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடையின் பின்பக்க வழியாகச் சென்று சுவர் மற்றும் கதவுகளை உடைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் கடையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அதில், முகமூடி அணிந்த நபர் ஒருவர் கடையின் பின்பக்கத்தில் கட்டடப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சாரங்கள் வழியாக மேலே ஏறி, லிப்ட் திறப்பு வழியாக உள்ளே நுழைந்து கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது

கொள்ளையன் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் வழித்தடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த காவல் துறையினருக்கு பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த நிஷாந்த் கிருஷ்ணா என்ற  இளைஞர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது வீட்டில்  போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் நேரில் சென்று விசாரணையை மேற்பார்வையிட்டார். வீட்டின் அறைகள், மாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா அல்லது வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனவா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.

இதற்கிடையே, நிஷாந்த் கிருஷ்ணா, மாடக்குளம் பகுதியில் உள்ள வயல்வெளிக்குச் சென்று இரண்டு பைகளில் துணிகளை எரித்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதியில் மாடு மேய்த்த நபர் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நிஷாந்த் கிருஷ்ணா ஆட்டோவில் அந்தப் பகுதிக்குச் சென்று வந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு நிஷாந்த் கிருஷ்ணாவின் செல்போனில் இருந்து மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த யூடியூபரும் இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சருமான மீனாட்சி என்ற பெண்ணுக்கு அழைப்பு சென்றது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.

செல்போன் அழைப்பு மற்றும் அதனைச் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் மீனாட்சியை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் மீனாட்சியையும், நிஷாந்த் கிருஷ்ணாவின் தந்தை சுரேஷையும் போலீசார் இன்று கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட மீனாட்சி அளித்த தகவலின் பெயரில் பழங்காநத்தத்தை அடுத்த மாடக்குளம் கண்மாய் பகுதியில் போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் இன்று பிற்பகல் மீனாட்சியை மாடக்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவர் அடையாளம் காட்டிய இடத்தில் புதைத்து வைத்திருந்த நகைகளை போலீசார் தோண்டி எடுத்து, சாக்குப்பையில் கொண்டு சென்றனர். இதன் மதிப்பு சுமார் 6 கிலோ என காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு நிஷாந்த் கிருஷ்ணா தலைமறைவாகி விட்டதால், அவரை 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback