மின் வாரிய துறையில் மொத்தம் 65,921 காலிப் பணியிடங்கள் அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு A total of 65,921 vacancies in the Electricity Board sector
மின் வாரிய துறையில் மொத்தம் 65,921 காலிப் பணியிடங்கள் அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு A total of 65,921 vacancies in the Electricity Board sector
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 21 ஆண்டுகால வெள்ளை அறிக்கையை இன்று காலை சென்னையில் வெளியிட்ட மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்,
மின்சார வாரியத்தில் நிலவி வரும் ஊழியர் பற்றாக்குறை குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சீரான செயல்பாட்டிற்கு ஒட்டுமொத்தமாக 1,40,635 ஊழியர்கள் இருக்க வேண்டும்.
தமிழக மின்சாரத்துறைக்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். 1.40 லட்சம் பணியாளர்களில் 74,714 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 65,921 பேர் பற்றாக்குறையாக உள்ளனர். தற்போதைய நிலவரப்படி மின்சார வாரியத்தில் 65,921 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த கால ஆட்சிகளில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததே இந்த அளவிற்குப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம் என்று அமைச்சர் குற்றம் சாட்டினார். கடந்த 2021 முதல் 2026 வரையிலான 5 ஆண்டுகால முந்தைய திமுக ஆட்சியில், இவ்வளவு பெரிய அளவில் காலிப்பணியிடங்கள் இருந்தபோதிலும் வெறும் 343 பேர் மட்டுமே புதிய பணியாளர்களாக வேலைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மின்வாரியத்தில் தற்பொழுது பணியாற்றி வருபவர்களில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மேலும் 16,782 பேர் பணி ஓய்வு பெற உள்ளதாக அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். இதனால் ஊழியர் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2000-ம் ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பேர் வேலை பார்த்த இடம். இத்தனை ஆண்டுகளில், நமது மின் தேவை, கட்டமைப்புகள், மின்வாரியத்தின் வருவாய் அனைத்தும் அதிகரித்திருகிறது. ஆகவே, இந்த பணியிடங்கள் அப்படியே இரட்டிப்பாகியிருக்க வேண்டும்.
மின்சார வாரியத்தில் நிலவி வரும் இந்த 65,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடப் பிரச்சினையைச் சரி செய்யத் தற்போதைய தவெக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் முதற்கட்டமாக, நடப்பு 2026-ஆம் ஆண்டிற்குள்ளாகவே மின்சாரத் துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 20,000 புதிய பணியாளர்கள் வேலைக்குச் சேர்க்கப்படுவார்கள் என்றும், முந்தைய ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5,000 கேங் மேன்களும் விரைவில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அறிவித்திள்ளார்
தமிழகத்தில் இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது. அனைத்து நுகர்வோர்களுக்கும் மின் கட்டணம் உயர்வு இல்லை. மின்வாரியத்தில் செலவினம் இருந்திருக்கிறது. வருவாயும் கிடைத்துள்ளது. மக்களுக்கு பலன் கிடைக்கவில்லை. த.வெ.க. ஆட்சியமையவில்லை என்றால் மின்வாரியம் தனியார் மயமாகியிருக்கும். மின் வாரியத்தை மேம்படுத்த வேண்டிய பணிகளில் ஈடுபடுவோம்
வெள்ளை அறிக்கை
2001-2006: வருவாய் ரூ.59,084 கோடி, செலவு ரூ.67,439 கோடி, பற்றாக்குறை ரூ.8,355 கோடி.
2006-2011: வருவாய் ரூ.92,737 கோடி, செலவு ரூ.1,28,200 கோடி, பற்றாக்குறை ரூ.35,463 கோடி.
2011-2016: வருவாய் ரூ.1,92,971 கோடி, செலவு ரூ.2,49,332 கோடி, பற்றாக்குறை ரூ.56,361 கோடி.
2016-2021: வருவாய் ரூ.3,20,140 கோடி, செலவு ரூ.3,78,674 கோடி, பற்றாக்குறை ரூ.58,534 கோடி.
2021-2026: வருவாய் ரூ.4,97,996 கோடி, செலவு ரூ.5,32,443 கோடி, பற்றாக்குறை ரூ.34,447 கோடி
கடந்த 25 வருடங்களாக மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 25 வருடங்களுக்கு முன்பு லாபம் இல்லை என்றால் நஷ்டம் இல்லாமல் இருந்தது. புதிய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, திட்டங்கள் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.87,399 கோடி கடன் வாங்கப்பட்டு உள்ளது. கூடுதல் வருவாய் வந்துள்ளது. அதேநேரத்தில் செலவினம் அதிகம் வந்துள்ளது. ஆனால் முன்னேற்ற திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. இது ஏன் என்று கேள்வி கேட்கிறோம்.
மின் வாரியத்தில் குறுகிய கால கான்ட்ராக்ட் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. அதை நீண்ட கால கான்ட்ராக்டாக மாற்றுவதன் மூலம் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாதம் 215 கோடி ரூபாய் சேமிக்கப்படும்.
கடந்த 2001ம் ஆண்டு 1.35 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் இருந்தன. கடந்த திமுக ஆட்சியில் 99,573 டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட்டன. தற்போது மொத்தம் 4,47,603 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. 25 ஆண்டுகளாக பழைய டிரான்ஸ்பார்மர்கள் உள்ளதால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 1.50 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்க திட்டமிட்டள்ளோம்.
தமிழக மின் வாரியத்தில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு இதுவரை இல்லை, விரைவில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு துவங்கப்படும்.
தமிழகத்துக்கு அதிகபட்சமாக 21,300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தமிழக மின்வாரியம் மூலமாக 3,495 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 4,246 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து 13,566 மெகாவாட் மின்சாரம் தமிழகம் வாங்குகிறது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
தமிழக மின்சாரத்துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்த பணியிடங்கள்: 1,40,635
பணியில் இருப்போர்: 74,714
காலிப்பணியிடங்கள்: 65,921
TNPDCL (மின் விநியோக நிறுவனம்)
மொத்த பணியிடங்கள்: 1,10,960
பணியில் இருப்போர்: 57,385
காலிப்பணியிடங்கள்: 53,575
TANTRANSCO (மின் பரிமாற்ற நிறுவனம்)
மொத்த பணியிடங்கள்: 17,187
பணியில் இருப்போர்: 9,336
காலிப்பணியிடங்கள்: 7,851
TNPGCL (மின் உற்பத்தி நிறுவனம்)
மொத்த பணியிடங்கள்: 8,912
பணியில் இருப்போர்: 5,837
காலிப்பணியிடங்கள்: 3,075
TNGECL
மொத்த பணியிடங்கள்: 3,576
பணியில் இருப்போர்: 2,156
காலிப்பணியிடங்கள்: 1,420
Tags: தமிழக செய்திகள்
