Breaking News

அரசியல் கட்சிகள் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் பொதுக் கூட்டங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அரசியல் கட்சிப் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணிகளைப் பாதுகாப்பாக நடத்துவது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிட்டது.

கூட்டம் நடத்துவதற்கு குறைந்தது 10 நாள்களுக்கு முன் அனுமதி கோர விண்ணப்பிக்க வேண்டும். 

50,000-க்கும் மேற்பட்டவா்கள் கூடும் பொதுக்கூட்டத்துக்கு 30 நாள்களுக்கு முன் அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டும். 

அனுமதி அளிப்பது அல்லது மறுப்பு தெரிவிப்பதை 15 நாள்களில் தெரிவிக்க வேண்டும். அனுமதி மறுப்புக்கான காரணத்தை எழுத்துபூா்வமாக அளிக்க வேண்டும்.

காவல் துறையின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும். 

சாலைப் பேரணியை (ரோடு ஷோ) மூன்று மணி நேரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். சாலையில் ஒருபுறம் மட்டும் பேரணியை நடத்த வேண்டும். மறுபுறம் போக்குவரத்துக்கு வழிவிட வேண்டும்.

இரண்டு மணி நேரத்துக்கு முன் கூட்டம் கூடக் கூடாது. கூட்டம் நடைபெறும் நேரத்தை சரியாக தெரிவிக்க வேண்டும். கா்ப்பிணிகள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது.அனுமதி அளித்ததைவிட கூடுதலாக 50 சதவீதத்துக்கும் மேல் கூட்டம் கூடினால் கடுமையான விதிமீறலாக கருதப்படும்.

கூட்டத்துக்கு வருபவா்களின் பாதுகாப்பு, மேலாண்மை, ஒழுங்குபடுத்துதல் அனைத்தும் கூட்டத்தை கூட்டுபவா்களின் பொறுப்பாகும். பொதுக்கூட்டங்களில் 100 பேருக்கு ஓா் உதவியாளா் என்ற கணக்கிலும், சாலைப் பேரணிக்கு 50 பேருக்கு ஓா் உதவியாளா் என்ற கணக்கிலும் கட்சிகள் உதவியாளா்களை நியமிக்க வேண்டும்.

பாதுகாப்பு கண்காணிப்புக் குழுக்களை மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் மாவட்ட ஆட்சியா்கள் அமைக்க வேண்டும். குறைவான ஆபத்து அளவில் கூடும் கூட்டத்தில் 200 பேருக்கு ஒரு காவலரும், மிதமான ஆபத்தில் 100 பேருக்கு ஒரு காவலரும், அதிக ஆபத்து அளவில் கூடும் கூட்டத்துக்கு 50 பேருக்கு ஒரு காவலரும் என்ற எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான விண்ணப்பங்களைப் பெறுவதும், அனுமதி அளிப்பதும், நிராகரிப்பதும் இணையவழியில் மேற்கொள்ளப்பட வேண்டும்.இந்த வழிகாட்டு நெறிமுறைகளை காவல் துறை தலைமை இயக்குநா் உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களை சம்பந்தப்பட்டவா்களுடன் ஆலோசனை நடத்தி மாவட்ட ஆட்சியா்களும், காவல் ஆணையா்களும் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



















Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback