பெண்கள் சுயமாக தொழில் தொடங்க 10 லட்சம் வரை கடன் - தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் பெண்களை வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கில், ‘தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ (TWEES) எனும் புரட்சிகரமான திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களை சொந்தக் காலில் நிற்க வைப்பதை லட்சியமாகக் கொண்டுள்ள இத்திட்டம், இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வழக்கமாக தொழில் தொடங்க வங்கிகளில் கடன் வாங்குவதற்குச் சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால், TWEES திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், ரூ. 10 லட்சம் வரை பெறப்படும் கடனுக்கு எந்தவிதமான சொத்துப் பிணையமும் தேவையில்லை. மொத்த திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதத் தொகையை (அதிகபட்சம் ரூ. 2 லட்சம்) அரசே மானியமாக வழங்கிவிடும்.விண்ணப்பதாரர் தனது பங்காக வெறும் 5 சதவீத முதலீடு செய்தால் போதுமானது. மீதமுள்ள தொகையை மட்டும் எளிய தவணைகளில் திருப்பிச் செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
18 முதல் 55 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித குறைந்தபட்சக் கல்வித் தகுதியோ அல்லது வருமான உச்சவரம்போ கிடையாது. சமூகத்தில் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை மக்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
என்னென்ன தொழில்கள் தொடங்கலாம்..?
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பெரும்பாலான சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு இக்கடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக அழகு நிலையம், தையல் கலை, பேக்கரி, கேட்டரிங், பொம்மை தயாரிப்பு, ஜிம் மற்றும் யோகா மையங்கள் போன்றவற்றைத் தொடங்கலாம். இருப்பினும், நேரடி விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளுக்கு இத்திட்டத்தில் அனுமதி இல்லை. வெறும் நிதி உதவி மட்டும் வழங்காமல், அந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கான 3 நாட்கள் ஆன்லைன் பயிற்சியையும் அரசே இலவசமாக வழங்குகிறது.
விருப்பமுள்ள பெண்கள் msmeonline.tn.gov.in/twees என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் மாவட்ட அளவிலான குழுவால் பரிசீலிக்கப்பட்டு வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை (DIC) அணுகலாம்.