SIR படிவத்தை சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதி கடைசி நாள் - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு
SIR படிவங்கள் வழங்கிய யாருடைய பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படாது மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர் சந்திப்பில் முக்கியத் தகவல்களை வெளியிட்டார். எஸ்.ஐ.ஆர். படிவங்களை வழங்க மேலும் கூடுதல் அவகாசம் இல்லை என்றும், வாக்காளர்கள் விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் தற்போது வரை 50 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், எஸ்.ஐ.ஆர். படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும். கணக்கீட்டுப் படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால், எந்தப் படிவமும் நிராகரிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டால், அதற்கான உரிய காரணம் தெரிவிக்கப்படும்.
மேலும் மாதிரி வாக்காளர் பட்டியலானது நான்கு பிரிவுகளாக வெளியிடப்படும். அதில் இறப்பு, விண்ணப்பம் வழங்காதோர், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர், போலி வாக்காளர் அட்டை வைத்திருப்போர் ஆகிய பிரிவுகளாக பட்டியல் வெளியாகும். அதேபோல, விண்ணப்பத்தை வாங்காதோர் என்ற பட்டியலும் வெளியிடப்படும்.
மேலும், 2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் கூடுதல் அவகாசத்திற்கு வாய்ப்பில்லை. பணிகள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதால், படிவங்களைப் பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். டிசம்பர் 4 ம் தேதி வரை எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கும் பணி நடைபெறும்" SIR படிவங்களை பூர்த்தி செய்து அளிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான BLO-க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.SIR பணிகளில் தேர்தல் ஆணையம் சார்பில் 83 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
