தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் செங்கோட்டையன் - விஜயுடன் சந்திப்பு!
தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் செங்கோட்டையன் - விஜயுடன் சந்திப்பு!
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்ததால் மூத்த தலைவரும், 50 ஆண்டு கால அதிமுக உறுப்பினருமான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
நீக்கப்பட்ட பிறகு, முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் ஒன்று கூடி, டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். அனைவரும் மீண்டும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மட்டும் 8 முறை போட்டியிட்டு 8 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் செங்கோட்டையன். இவர் பள்ளிக்கல்வி, வனம், வருவாய், விவசாயம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது எம்.எல்.ஏ. பதவியைத் துறந்த பிறகு, நாளை தனது அனைத்து ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
செங்கோட்டையன் உடன் அவரது ஆதரவாளர்களும் தவெகவில் நாளை இணைய உள்ளனர்முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் இணைகின்றனர்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு முக்கிய நிர்வாகியான ஓ.பன்னீர்செல்வமும் வரும் டிசம்பர் 15ம் தேதி வரை எடப்பாடி பழனிசாமிக்குக் கெடு விதித்துள்ளார். அதற்குப் பிறகு, அவர் தனி கட்சி தொடங்குவாரா அல்லது கே.ஏ.செங்கோட்டையனைப் போல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா என்பது விரைவில் தெரியவரும்.
Tags: அரசியல் செய்திகள்