2026ல் தவெக ஆட்சி- அனைவருக்கும் வீடு , பைக், விஜய் தேர்தல் அறிக்கை முழு விவரம்
கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்து வந்தார். கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், சென்னை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ளது. 2,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் இல்லாமல், முழுக்க முழுக்க உள் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் சங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய விஜய், “
நாட்டுக்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார். பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார் என எம்ஜிஆர் பாட்டு பாடியிருப்பார். அப்படிப்பட்ட நம் அறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம் தான் இந்த காஞ்சிபுரம். தன்னுடைய வழிகாட்டி என்பதாலேயே தான் ஆரம்பதித்த கட்சி கொடியில் அண்ணாவை வைத்தவர் எம்ஜிஆர். ஆனால், அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
இன்று நாம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்துள்ளோம். எனவே இந்த மக்கள் சந்திக்கிற பிரச்சினையை பற்றி நாம் பேசியாக வேண்டும்.இந்த காஞ்சி மண்ணை வாழ வைக்கிற ஜீவநதி பாலாறு, உயிர் நதி பாலாறு., இந்த மக்களின் ரத்தத்தோடும் உயிரோடும் கலந்து ஓடுவது பாலாறு
இந்த பாலாற்றை அண்ணா பெயரையும் பெரியார் பெயரையும் பெயருக்கு வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?சுரண்டிட்டாங்க, கொள்ளையடிச்சுட்டாங்க, நாசம் பண்ணிட்டாங்க, மோசம் பண்ணிட்டாங்கன்னு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.ஆக மொத்தம் அழித்துவிட்டார்கள்.இதை நான் போற போக்கில் அடித்து விடவில்லை. ஆதாரத்தோடு சொல்கிறேன். அனுமதிக்கப்பட்ட லெவலை தாண்டி 22.70 லட்சம் டன் யூனிட் மணலை கொள்ளை அடித்திருக்கிறார்கள். அதாவது 4730 கோடி ரூபாய் மதிப்பிலான மணலை கொள்ளை அடித்திருக்கிறார்கள்.கம்மிதான் இல்ல….இதற்கான ஆதாரம் எல்லாம் கோர்ட்டில் இருக்கிறது. அமலாக்கத் துறை டிபார்ட்மென்டிடம் இருக்கிறது.அந்தத் துறையில் வேலை செய்த சில நல்லவர்கள், இந்தக் கொள்ளைகளை எல்லாம் தாங்க முடியாமல் வெளியில் வந்து சொன்ன ஆதாரங்கள் உள்ளது. இது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும்.எனவே இது சம்பந்தமாக ஆதாரங்களைக் கொடு என்றெல்லாம் அவர்களால் கேட்க முடியாது.
மணலை கொள்ளை அடித்தால் நீர்நிலைகள் அழியும், ஏரி குளம், கண்மாய் எல்லாம் அழியும். இவையெல்லாம் அழிந்தால் விவசாயம் அழியும்.விவசாயம் அழிந்தால் விவசாயிகள் அழிந்து விடுவார்கள். ஆக மொத்தம் நாம் எல்லோரும் அழிந்து விட வேண்டியது தான்.இப்படியும் மேலிருந்து கீழ் வரைக்கும் ஒரு கட்சியில் சிண்டிகேட் போட்டு கொள்ளையடிப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தமிழக முதல்வர். நமக்கு கொள்கை இல்லை என்று நம்மை பார்த்து கேட்கிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கோட்பாட்டை அறிவித்த எங்களுக்கு கோட்பாடு இல்லையா?
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நமக்கு கொள்கை இல்லையா?
சிஏஏ-வை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா?
வக்பு சட்டத்தை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா?
கல்வியை மாநில பட்டியலுக்கு சேர்க்க கூறியும், அதற்கு இடைக்கால தீர்வு கூறிய நமக்கு கொள்கை இல்லையா?
சமத்தும் சம வாய்ப்பு வழங்க கோரிய நமக்கு கொள்கை இல்லையா?
இவர்கள் கொள்கையே கொள்ளை தானே? கட்சி ஒன்றும் சங்கரமடம் இல்லை என சொன்னது யார்? அதை யார் சொன்னார்? எதற்கு சொன்னார்? இப்போது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை யோசித்து பாருங்கள். அதனால் பவள விழா பாப்பா, பாசாங்கு காட்டாதே பாப்பா, நீ நல்லவர் போல் நடிப்பதை பார்த்து நாடே சிரிக்குது பாப்பா என சொன்னோம். இன்னும் நாங்கள் விமர்சிக்க தொடங்கவே இல்லை. அதற்குள் அலறினால் எப்படி? அதனால் உங்களின் அரசவை புலவர்கள் இருந்தால், கர்சீப் கொண்டு அவர்கள் கண்ணீரை துடைத்துவிடுங்கள்.
இதே காஞ்சிபுரத்தின் உலகப் பெருமை, பட்டும் கைத்தறி துணியும் அதை நெசவு செய்து கொடுக்கிற நெசவாளர்களும் தான்.காஞ்சிபுரம் பட்டு என்றால் உலகத்துக்கே தெரியும். ஆனால் அதை தயாரித்துக் கொடுக்கும் நெசவாளர்களின் நிலைமை என்ன தெரியுமா? வறுமை துன்பம், கந்து வட்டி கொடுமை இதுதான்.பட்டு கைத்தறிக்கும் , பருத்தி கைத்தறிக்கும் கூட்டுறவு சங்கங்கள் இருக்கிறது.
சுமார் 40,000 பேர் அதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதுபோக சாயத்தொழில் தரி பட்டறை தொழில் என 40 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஆனால் அவர்களின் ஒரு நாள் கூலி எவ்வளவு தெரியுமா? வெறும் 500 ரூபாய் தான்.இதை அதிகப்படுத்திக் கொடுங்கள் என்று அவர்கள் போராடியும் எதுவும் நடக்கவில்லை. இதோடு அவர்கள் கஷ்டம் முடிந்து விட்டதா… வடகிழக்கு பருவமழை அந்த 500 ரூபாய் கூலிக்கும் வேட்டு வைத்துவிட்டது.டெல்டா மாவட்டங்களில் எப்படி விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்டார்களோ, அவர்களை கண்டு கொள்ளாமல் இந்த அரசாங்கம் எப்படி கைவிட்டதோ, அதுபோலத்தான் நமது கைத்தறி நெசவாளர்களும் பாதிக்கப்பட்டார்கள்.. அவர்களையும் அரசாங்கம் கைவிட்டு விட்டது.
அடுத்து இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் பஸ் ஸ்டாண்ட் . இது 60 வருடங்களுக்கு முன்னால் கட்டியதாம். அண்ணா ஆட்சிக்கு வந்த போது கட்டி இருப்பார்கள் போல.அதை புதுப்பிக்க கூட இல்லை. கேட்டால் அந்த இடம் வழக்கில் இருக்கிறது என்பார்கள்.இல்லை நான் கேட்கிறேன் ஒரு அரசினால் வேறொரு இடத்தை தேர்வு செய்து ஒரு பஸ் ஸ்டாண்ட் கட்டித் தர முடியாதா?பிரச்சனை என்ன தெரியுமா.. அவர்களுக்கு மக்களைப் பற்றி நினைக்கவே எண்ணமில்லை அதுதான் காரணம்.
அடுத்து, வாலாஜாபாத் அருகில் அவலூர் ஏரி இருக்கிறது. அது பாலாற்றை விட உயரமாக இருப்பதால், ஆற்றுத்தண்ணீர் ஏரிக்குப் போக முடியாமல் போய்விடுகிறது. அதை சரி செய்து அந்த இடத்தில் ஒரு தடுப்பணை கட்டினால், ஏரி நிறைய தண்ணீர் நிற்கும், அப்படி செய்தால் பல்லாயிரம் ஏக்கர் விவசாயம் செழிக்கும்.இதற்கு இன்னும் மக்கள் எத்தனை வருடங்கள் போராட வேண்டும்.பரந்தூர் விமான நிலைய பிரச்சனையும் இங்கு உள்ளது. இந்த விவகாரத்தில் விவசாயிகள் பக்கத்தில் தான் நாம் இருப்போம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் எங்களுக்கோ விவசாயிகளுக்கோ எந்தவிதமான காரணத்தையும் சொல்லி எஸ்கேப் ஆக முடியாது.இப்படி மக்களுக்காக மக்களோட பிரச்சினைகளை எடுத்து பேசுவதால் ஆட்சியில் இருக்கிறவர்களுக்கு நமது மீது ஆத்திரம் வரத்தானே செய்யும்.அதனால்தான் சட்டசபையில் ஆரம்பித்து சாதாரண நிகழ்ச்சி வரை, மேடைக்கு மேடை டிவிகே பற்றி தான் பேசுகிறார்கள்.
இதற்கெல்லாம் கண்டிப்பாக நாங்கள் பதில் சொல்வோம். சொல்லாமல் இருக்க மாட்டோம்.இப்போது கூட கரூரை பற்றி பேசுவேன் என்று எதிர்பார்த்து இருப்பார்கள். அதைப்பற்றி நான் அப்புறமாக பேசுகிறேன்.இப்போது நமது விஷன் என்னவென்று சொல்ல வேண்டுமென ஆசைப்படுகிறேன்.நாம் ஆட்சிக்கு வந்தால்.. அது என்ன வந்தால்… வருவோம். மக்கள் கண்டிப்பாக நம்மை வரவைப்பார்கள்.மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி வர வைக்கத்தானே செய்வார்கள்.அப்படி மக்கள் விரும்பும் ஆட்சியில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தேர்தல் அறிக்கையில் கண்டிப்பாக சொல்வோம்.
அதற்கு முன்னால், சிலவற்றை சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
எல்லோருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். காரும் தான் லட்சியம். அதற்கான வசதிக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் டிகிரி படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும்.அதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு தகுந்தார் போல், கல்வியில் பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.அரசு மருத்துவமனைகளுக்கு பயம் இல்லாமல் மக்கள் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
பருவ மழை காலங்களில் வெள்ளத்தால் ஊரும் மக்களும் விவசாயமும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று பட்டியலிட்டார்.தொடர்ந்து, “ இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க 4000 கோடி திட்டம் உள்ளது என ஒரு உருட்டு உருட்டினார்களே” என குறிப்பிட்ட விஜய், “இது போன்றெல்லாம் எதுவும் இல்லாமல் உண்மையான ஒரு பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
மீனவர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டும். உருவாக்குவதோடு விட்டுவிடாமல் அதை செயல்படுத்த வேண்டும்.
குறிப்பாக தொழில் துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிட ரொம்ப ரொம்ப முக்கியமாக சட்டம் ஒழுங்கை சரியாக வைத்திருக்க வேண்டும்.அம்மா, தங்கைகளுக்கு பவர்ஃபுல்லான பாதுகாப்பை உருவாக்க வேண்டும்.அண்ணா யூனிவர்சிட்டியில் அந்தப் பெண்ணுக்கு நடந்த பிரச்சனை மாதிரியோ கோவையில் அந்த கல்லூரி பெண்ணுக்கு நடந்த பிரச்சினை மாதிரியோ இனி யாருக்கும் நடக்கவே விடக்கூடாது.
நமது வீட்டுப் பெண்கள் பயமே இல்லாமல் இருக்க வேண்டும்.இதை எப்படி செயல்படுத்த போகிறோம் என்று நமது தேர்தல் அறிக்கையில் விரிவாக கொடுப்போம்.அவர்களைப் போல் எல்லாத்தையும் அடித்து விட்டு ஏமாற்றும் வேலை இங்கே கிடையாது.மீண்டும் சொல்கிறேன் நான் மக்களுக்கு நன்மை செய்வதற்காக மட்டும்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.எங்களுக்கு வேறு எந்த அஜெண்டாவும் கிடையாது. அதனால்தான் கொள்கை எதிரி, அரசியலில் எதிரி யார் யார் என்று தெளிவாக சொல்லிவிட்டு களத்திற்கு வந்திருக்கிறோம்.அதில் எந்தவிதமான குழப்பமோ ஊசலாட்டமோ கிடையாது” என்று கூறினார்
Tags: தமிழக செய்திகள்