Breaking News

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் என்னென்ன? What are the rights granted to women by Islam? Let's find out.

அட்மின் மீடியா
0
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் என்னென்ன? What are the rights granted to women by Islam? Let's find out.



இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் என்ன என்பது பற்றிய அட்மின் மீடியாவின் இந்த கட்டுரை விரிவாகப் புரிந்து கொள்ள நம்மை அழைத்துச் செல்லும்...

இஸ்லாம், சுமார் 1450 ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுரிமை, எழுத்துரிமை, கல்வியுரிமை, கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, கணவனிடமிருந்து மணவிலக்கு பெறும் உரிமை, வாரிசுரிமை, சொத்துரிமை, சுயமாக சம்பாதிக்கும் உரிமை, கற்பைக் காத்து கண்ணியமாக வாழும் உரிமை இப்படி வாழ்வின் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு எவ்வித போராட்டமும் இன்றி வழங்கியுள்ளது.

அமைதியையும், சமத்துவத்தையும் போதிக்கும் இனிய மார்க்கம் இஸ்லாம். பெண்களுக்கு அதிகமான உரிமைகளை அன்றே வழங்கிய மார்க்கம் இது

இவ்வுலகில் பெண்களின் கண்ணியம்,பாதுகாப்பு,உரிமையை போற்றுவதில்  இஸ்லாம் அளவிற்கு யாராலும் சொல்லபடவில்லை. 

அந்தக் காலத்தில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அன்று பெண் என்பவள்,

1. ஆணின் அடிமை

2. அவனின் சிற்றின்பப் பொருள்

3. ஒருவர் விட்டுச் செல்லும் வாரிசுச் சொத்தின் ஓர் அங்கம்

4. மனிதப் பிறவியாக கருதப்பட முடியாதவள்

5.குடும்பத்தின் அவமானச் சின்னம்

6. ஒரு சுமை

7.. எத்தகைய உரிமையையும் பெறத் தகைமையற்றவள் என்றெல்லாம் கருதப்பட்டாள்.

பெண்ணினம் இவ்வாறு மிக இழிவாக நோக்கப்பட்டும் கேவலமாக நடத்தப்பட்டு வந்த ஒரு காலச் சூழ்நிலையிலேயே நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதைச் சுமந்து வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த தூது பொதுவாக மனித விடுதலையை இலக்காக கொண்டிருந்தது. குறிப்பாகவும் சிறப்பாகவும் பெண் விடுதலையை அது அடிநாதமாக கொண்டிருந்தது. இஸ்லாத்தை ஒரு பெண் விடுதலை மார்க்கம் என வர்ணித்தால் அது மிகையாகாது.

இஸ்லாத்தை ஏற்ற முதல் மனிதர் ஒரு பெண் என்பதும் இஸ்லாத்திற்காக முதலில் உயிர்த்தியாகம் செய்தவர் ஒரு பெண் என்பதும் நினைவு கூரத்தக்கதாகும்.

அந்த காலத்தில் பெண்கள் சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்டனர்.மேலும் பெண் பிள்ளையாக பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் நிலையே இருந்து வந்தது.

தெய்வங்களின் பெயராலும் மூடநம்பிக்கையினாலும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அன்று இருந்தது... மூடநம்பிக்கையின் காரணமாக குழந்தைகளைக் கொல்லக்கூடாது என்று அல்லாஹ் தனது வசனங்களை இறக்கி தடை செய்தான்... 

‘வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்’  (17:31) என்று இறைவன் திருமறையின் பிரகடனப்படுத்தினான்.

இந்த இறைக்கட்டளையின் மூலமாகச் சிசுக்கொலைக்கு இஸ்லாம் முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் பெண் சிசுக்கொலை பெரும்பாவம் என்கிறது இஸ்லாம்.

பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிரோடு புதைக்கும் நடைமுறை இருந்த காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தால் அகீகா (ஆடு அறுத்து விருந்து வைத்து )அந்த நிகழ்வை கொண்டாடுங்கள் என்ற உன்னத புரட்சியை கற்று தந்தது இஸ்லாம் . 

மேலும் அல்லாஹ் கூறுகிறான் யார் பெண் குழந்தைகளை பெற்று நல்ல முறையில் வளர்த்து நல்ல மணமகனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்ற சுபச்செய்தி கூறுகிறான்.

இஸ்லாத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளோ ஏராளம். அதனை விளக்கமாக கூறினால் பதிவு நீண்டுக்கொண்டே போகும் என்கிற பட்சத்தில் சுருக்கமாக கீழே சிலவற்றை ஆதாரத்துடன் தருகிறோம்.




குடும்ப வாரிசு

ஆண் பிள்ளைகள் தான், குடும்ப வாரிசாகும் என்று கருதப்படுகிறது. அதனால்தான் பெயர் சொல்ல ஆண்பிள்ளை வேண்டுமென்று தாய் தந்தையர் விரும்புகின்றனர். ஆனால், ஆண் மட்டுமல்ல. பெண்ணும் குடும்ப வாரிசுதான் என்று இஸ்லாம் இயம்புகிறது.

அருமை நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் பிள்ளைகளான ஹஸன் (ரலி), ஹுசைன் (ரலி) அவர்களின் வழி தோன்றல்களைத்தான் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் வாரிசுகளாக உலகமெங்கும் முஸ்லிம்களால் கண்ணியமாகக் கருதப்படுகிறது.


பெண் கல்வி:-

மனிதனை மனிதனாக வாழவைப்பது கல்வியே. இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்குமுரிய கடமைகளில் ஒன்றாக கல்வி கற்பதை ஆக்கியிருக்கின்றது.

கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயக் கடமையாகும்." என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். 

இதற்கு நபிகளாரின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களே சிறந்த சான்று. மார்க்கத் தீர்ப்புகளை வழங்குவதிலும், திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு விளக்கம் சொல்வதிலும் அவர்கள் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்கள். பெண்கள் கல்வி கற்க இஸ்லாம் என்றென்றும் தடை விதித்ததில்லை.

உலகிலேயே முதன்முதலில் கி.பி. 859 ஆம் ஆண்டு (அதாவது 9 ஆம் நூற்றாண்டில்) மொரோக்கோவின் ஃபெஸ் (Fez) என்ற நகரில் அல்கரவிய்யின் பல்கலைக்கழகம் (Al Qarawiyyin University) நிறுவப்பட்டது. அதை நிறுவியவர் ஃபாத்திமா பின்த் முஹம்மத் அல்ஃபிஹ்ரிய்யா அல்குறைஷியா என்றொரு முஸ்லிம் பெண்.

உலகிலேயே மிகப் பழமையானதும் இன்று வரை இயங்கிக்கொண்டிருப்பதும் இந்தப் பல்கலைக்கழகம்தான். இதில் இன்னொரு புதுமை என்னவென்றால் உலகிலேயே முதன்முதலாக படிப்பு முடிந்ததும் பட்டங்கள் அளிக்கப்படுவதை அறிமுகப்படுத்தியதும் இந்தப் பல்கலைக்கழம்தான்! இதன் பிறகு தான் இதர பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் அளிக்கும் பழக்கம் வந்தது.


திருமணத்தில் பெண் விருப்பம் கட்டாயம்:-

வரதட்சனை கொடுமையால் பல ஏழை பெண்கள் திருமணம் ஆகாமல் முதிர்கன்னிகளாக இருக்கும்  இக்காலத்தில்*

பெண்ணை திருமணம் செய்ய ஆண் திருமணக் கொடை கொடுக்க வேண்டும் என்று 1450 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கட்டளையிட்டான்.*பெண்ணின் சம்மதம் பெற்றே அவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றது. திருமணத்தின் போது ஒரு பெண் தனது கணவனிடம் மஹர் கேட்கும் உரிமையைப் பெற்றுள்ளாள்

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெண்ணின் விருப்பமே முக்கியமானது. 

நம்பிக்கை கொண்டோரே, பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை' (திருக்குர்ஆன் 4:19) என்று திருமறையில் இறைவன் கூறுகிறான். திருமணத்திற்குப் பெண்ணின் சம்மதம் அவசியம் என வலியுறுத்துகிறது இஸ்லாம்.

மணமகன் தான் மணக்கப்போகும் பெண்ணுக்கு அவன் சக்திக்கேற்ப மணக்கொடை (மஹர்) கொடுக்க வேண்டும். மணப்பெண் மஹர் எனும் மணக்கொடையைப் பெறுவதை இஸ்லாம் பெண்ணிற்கான உரிமையாக ஆக்கியுள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது `நீங்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹரை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்'. (திருக்குர்ஆன் 4:4)




விவாகரத்து:-

மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும்.

கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.

விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

தன் கணவனுடன் இனைந்து வாழ முடியாத சூழல் உருவாகும் போது ஒரு பெண் தன் கணவனிடமிருந்து குலா முறையில் மணமுறிவு பெறும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. 

தான் விரும்பாத தனக்கு இயைவு இல்லாத கணவனுடன் காலமெல்லாம் வாழ வேண்டும் என்ற நியதியை இஸ்லாம் விதிக்கவில்லை




மறுமண உரிமை:-

கணவன் இறந்தால் மனைவியை உயிரோடு எரிக்கும் அல்லது புதைக்கும் காலத்தில் கணைவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்யும் உரிமை அல்லாஹ் வழங்கினான்

கணவன் இறந்த பிறகு அல்லது விவாகரத்து ஆன பிறகு, அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அவளுக்குத் தடையாக இருக்கக்கூடாது, அவளை அனுமதிக்க வேண்டும் என்று பெண்களுக்குரிய உரிமையை நிலைநாட்டிய பெருமகனாரின் திருவசனத்தைப் பாருங்கள்.

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணமடைந்துவிட்டால், அவருடைய அந்த மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமதமாகக் காத்திருக்க வேண்டும். அப்படித் தங்களின் தவணையை நிறைவு செய்துவிட்டு தங்கள் தனிப்பட்ட விஷயத்தில் (தம் விருப்பத்திற்கொப்ப) ஒழுங்கான முறையில் செயல்பட அவர்களுக்கு உரிமையுண்டு.”பாகம்.2. அத்.2 அல்பகறா - 234”

நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்து, அவர்கள் தங்களின் (இத்தா) தவணையை நிறைவு செய்தால், பிறகு அவர்கள், தங்களுக்குரிய துணைவர்களை நேர்மையான முறையிலும் – பரஸ்பர பொருத்தத்தின் அடிப்படையிலும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அவர்களைத் தடுக்காதீர்கள். இவ்வாறு (ஒருபோதும் செயல்படக் கூடாது என்று) உங்களில் – அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்டோருக்கு அறிவுரை கூறப்படுகின்றது. இதுவே உங்களுக்கு மிகத் தூய்மையானதும், பண்புமிக்கதுமான வழிமுறையாகும். மேலும், அல்லாஹ் நன்கு அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.”பாகம்.2. அத்.2 அல்பகறா – 232

இன்றைக்கும் விதவைப் பெண்களை வேறுபட்ட கண்ணோட்டத்தோடும், வக்கிரத்தோடும் பார்க்கின்ற உலகிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

ஆனால் இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னால், பெண்களுடைய மறுமணம் பற்றிச் சிந்தித்ததோடு மட்டுமல்லமல், அவர்களுக்கான உரிமையை நிலைநாட்டி, அதற்கான தீர்க்கமான முடிவையும் சொல்லியிருக்கிறார் என்றால் அண்ணலின் துணிவை என்னென்று போற்றுவது?

அதுமட்டுமல்லாமல், மன வேறுபாட்டினால் விவாகரத்து செய்துவிட்ட பிறகு, அவர்களை நல்ல முறையில் வாழச் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.




சொத்துரிமை:-

பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்கிய மார்க்கம் இஸ்லாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கும் பாகம் உண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு.’ (திருக்குர்ஆன்-4:7) என்ற இறை வசனத்தின் மூலம் பெண்களுக்கான வாரிசுரிமை உறுதி செய்யப்பட்டது.

தந்தையின் சொத்தில் மகளுக்கும், கணவனின் சொத்தில் மனைவிக்கும், மகனின் சொத்தில் தாய்க்கும் பாகம் உண்டு என அறியமுடிகிறது.

இன்றளவும் சில சமூகங்களில் பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. வேறு சில சமூகங்களில் கடந்த நூற்றாண்டில்தான் மிகவும் தாமதமாகப் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்டது. 

பெண்களை வாரிசாக ஏற்றுகொள்ளாத காலத்தில் பெண்களுக்கு முதன்முதலில் சொத்தில் பங்குண்டு என்று அல்லாஹ் பிரகடனபடுத்தினான்.

அதுவும் பெண்கள் கடுமையாகப் போராடிய பிறகே அந்த உரிமை அவர்களுக்குச் சட்டமாக்கப்பட்டது. ஆனால் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே, மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத காலத்திலேயே குர்ஆன் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கிவிட்டது. அதற்காகப் பெண்கள் போராட்டம் நடத்தாத காலம் அது

முடிவுரை:-

பெண்கள் சமுதாயம் இந்த நூற்றாண்டில் போராடிப் பெற்ற நியாயமான பல உரிமைகளை, 1,400 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் எந்தவிதமான போராட்டமும் நடத்தாமலேயே இஸ்லாம் வழங்கி விட்டது.வழிபாட்டு உரிமையில், சொத்துரிமையில், விவாகரத்து உரிமையில், கல்வி கற்பதில் என அனைத்து உரிமை களையும் வழங்கி அவர்களை கண்ணியப்படுத்திய மார்க்கம் இஸ்லாம்.

1450 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வளவு உரிமைகளையும் சலுகைகளையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியதால் தான் இந்நூற்றாண்டில் சமூகத்தில் பெண் புரட்சி ஏற்பட்டது.

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback