ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்சாவிற்கு கோட்டை நல்லிணக்க விருது முதல்வர் வழங்கினார்
ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்சாவிற்கு கோட்டை நல்லிணக்க விருது முதல்வர் வழங்கினார்
சென்னையில் நடந்த 76வது குடியரசு தின விழாவில், தமிழ்நாடு அரசின் கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்தை அமீர் அம்சா என்பவருக்கு வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர் அம்சா, ஆதரவற்றவர்களின் பிரேதங்களை காவல்துறை உதவியுடன் இலவசமாக நல்லடக்கம் செய்து வருகிறார்!
மேலும் கோட்டை அமீர் விருது மூலம் கிடைத்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை மீண்டும் தொண்டு செய்வதற்கே பயன்படுத்துவேன் என அமீர் அம்சா தெரிவித்துள்ளார்
இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்
தமிழக அரசு மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீரின் பெயரால் 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' என்ற பதக்கத்தினைத் தோற்றுவித்து ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அந்த பதக்கத்தை வழங்கி வருகிறது.மேலும் அவர்களுக்கு ரூ5 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்
இந்த 2025 ம் ஆண்டு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஏ.அமீர் ஹம்சாவுக்கு வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் அருப்புக்காரத் தெரு, கதவு எண். 34 என்ற முகவரியில் வசித்து வரும் எஸ்.ஏ.அமீர் ஹம்சா என்பவர் மத நல்லிணக்கத்திற்காக பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.எஸ்.ஏ.அமீர் ஹம்சா 'அப்பாஸ் அலி டிரஸ்ட்' என்ற பெயரில் சொந்தமாக மாருதி ஆம்புலன்ஸ் வேன் வைத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, இதுவரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் பிரேதங்களை போலீசார் உதவியுடன் இலவசமாக நல்லடக்கம் செய்தும் வருகிறார்.
இந்த சேவையை சாதி, மத பேதமின்றி செய்து வருகிறார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை பாதுகாப்பது, மருத்துவ உதவிகள் செய்வது போன்ற சேவைகளையும் செய்து வருகிறார்.
கரோனாவில் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், கரோனா தொற்றால் உயிரிழந்த 200 பிரேதங்களை நல்லடக்கம் செய்யவும் உதவியுள்ளார்
Tags: மார்க்க செய்தி
