ஸ்கூட்டர் மீது மோதியதற்கு மன்னிப்பு கேட்ட மாணவிக்கு முத்தம் கொடுத்த இளைஞர் - சிறையில் அடைத்த போலீஸ்..!
கோவையில் ஸ்கூட்டர் மீது மோதியதற்கு சிரித்து கொண்டே மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபரை குனியமுத்தூர் காவல் துறையினர் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவையைச் சேர்ந்த 20 வயது கல்லூரியில் மாணவி நேற்று முன் தினம் பாலக்காடு சாலையில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த சிறிய குழியில் இருசக்கர வாகனம் இறங்கி நிலை தடுமாறியது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் இரு சக்கர வாகனத்தின் மீது, மாணவியின் வாகனம் மோதியது.
இதனையடுத்து வாலிபரிடம் லேசாக சிரித்தபடி மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு மாணவி சென்றுள்ளார்.
அந்த மாணவி தன்னிடம் சிரித்துதான் பேசுகிறாள் என்று நினைத்து இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளார். சுமார் ஒரு கி.மீ தூரம் வரை மாணவியின் பின்புறம் சென்று மாணவியின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேச்சு கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த இளம் பெண்ணிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென அந்த பெண்ணின் கையைப் பிடித்து கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் சத்தமிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்த நபர் கோவை புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த முகமது ஷெரீப் என்பதும், அவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பதும் தெரிய வந்தது.அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த இளம் பெண் சம்பவம் நடந்த போது சிரித்தபடியே பேசியதால் அதை தவறாக எடுத்துக் கொண்ட அவர், பின் தொடர்ந்து சென்று பேசி முத்தமிட்டது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் முகமது ஷெரீப்பை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.கோவையில் பட்டப்பகலில் நடுரோட்டில் இளம் பெண்ணுக்கு வாலிபர் முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags: தமிழக செய்திகள்
