சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் விலகல் முழு விவரம்
நாம் தமிழர் கட்சியின் சேலம் ஒன்றிய பொறுப்பாளர் பால்பண்ணை ரமேஷ், சேலம் வடக்கு தொகுதி முன்னாள் பொருளாளர் மெய்யனூர் செல்வமூர்த்தி உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே சேலம் மாவட்ட செயலாளர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகிய நிலையில் இன்று பால்பண்ணை ரமேஷ், மெய்யனூர் செல்வமூர்த்தி உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகல்!
நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.சேலம் மாவட்ட பொருளாளர் சதீஷ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
2021 சட்டசபை தேர்தலில் நா.த.க. சார்பில் சேலம் மேற்கில் போட்டியிட்ட நாகம்மாள் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ள நிர்வாகிகள், அதற்கான காரணம் ஏதும் கூறவில்லை.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு தொகுதி, சேலம் ஒன்றிய பொறுப்பாளர் பால்பண்ணை ரமேஷ் மற்றும் சேலம் வடக்கு தொகுதி முன்னாள் பொருளாளர் மெய்யனூர் செல்வமூர்த்தி ஆகிய தாங்கள் தங்களுடன் பயணித்த 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இன்று முதல் நாம் தமிழர் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
மேலும் இதுநாள் வரை தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பால்பண்ணை ரமேஷ், மெய்யனூர் செல்வமூர்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர். ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
