தமிமுன் அன்சாரி எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன முழு விவரம்
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்தது துணிச்சலான செயல் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை இன்று சேலத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி,
20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை சாதி மத வழக்கு பேதம் இன்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என்பதை முன்னெடுத்து வருகிறோம்.
36 முஸ்லிம் சிறைவாசிகள் உள்பட அனைவரின் விடுதலை சாத்தியப்படுத்தித் தரக் கோரியும், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுடைய விடுதலையை உறுதிபடுத்துங்கள் என தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவித்து இருந்தோம்.
ஆனால், தமிழ்நாடு அரசு அது குறித்து சேவி சாய்க்கவில்லை.அதற்கான ஆதிநாராயணன் குழு குறித்தும் எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இது குறித்து நாங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளை முற்றுகையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ததைப் போன்று தமிழ்நாட்டில் மத்திய சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வரும் 36 இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நாங்கள் கோரி வருகிறோம்.
20 ஆண்டு சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்துள்ள அனைத்து கட்சிகளையும் சந்தித்து வருகிறோம்.அதன் தொடர்ச்சியாகவே சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
அதிமுக மதுரை மாநாட்டில் சிறைவாசிகள் தொடர்பான தீர்மானம் போடப்பட்டதற்கு எங்கள் கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துள்ளோம்.
பா.ஜ.க கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி. துணிச்சலான இந்த முடிவை எடுத்ததற்காகத் தமிழ்நாடு மக்கள் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக எங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்து இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் குறித்துப் பேசவில்லை. இது அரசியல் சந்திப்பு இல்லை. எங்களுடைய கூட்டணி குறித்து வருகிற டிசம்பரில் நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்