பத்திரப்பதிவின் போது சொத்தின் புகைபடத்தை கட்டாயம் இணைக்க வேண்டும் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கை பத்திர பதிவுத்துறை எடுத்து வருகின்றது, அந்த வகையில் தற்போது சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது
அதாவது பத்திரபதிவு செய்யும் சொத்து விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தை புகைப்படம் எடுத்து ஆவணமாக இணைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என பதியப்படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-
பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும்: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் தகவல் பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கவும் விடுதல் இன்றி அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதனால் அரசுக்கு வரும் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே காலி மனையிடங்களை ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு (புவியியல் ஆயங்கள்) புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என கடந்த வாரத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.
பதியப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக சேர்த்து மோசடி பதிவு செய்யப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. எனவே இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து அரசு புதியதொரு முடிவினை எடுத்துள்ளது.
அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும். இந்த நடைமுறையானது எதிர்வரும் அக்டோபர் முதல் தேதி முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும்.
Tags: தமிழக செய்திகள்