கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை வெளியானது முதல் தகவல் அறிக்கை முழு விவரம் dig vijayakumar commit suicide
கோவை சரக டிஐஜி விஜயகுமார் உயிரை மாய்த்து கொண்டது தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி கோவை சரக டிஐஜியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் நேற்று தனது வீட்டில் மெய் பாதுகாவலர் ரவிசந்திரன் என்பவரிடம் கை துப்பாக்கியை வாங்கி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரது தற்கொலைக்கு மனஅழுத்தமே காரணம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், டிஐஜி விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
பின் டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதனை அடுத்து தேனி மின் மயானத்தில் விஜயகுமாரின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்ற பின் அவரது உடல் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் உயிரை மாய்த்து கொண்டது தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது.
அதில் ஜனவரி மாதத்தில் இருந்தே, சரியான தூக்கம் வரவில்லை என தூக்க மாத்திரை எடுத்துக்கொள்வார் .நேற்று காலை என்னுடைய துப்பாக்கியை எடுத்து எப்படி பயன்படுத்துவது என என்னிடம் கேட்டார் . அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கி சத்தம் கேட்டதையடுத்து ஓடி வந்து பார்த்தபோது டிஐஜி தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார் எந்த காரணத்திற்காக டிஐஜி உயிரை மாய்த்து கொண்டார் என தெரியவில்லை என்று டிஐஜி பாதுகாவலர் ரவிச்சந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக அந்த முதல்தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
174 சட்டப்பிரிவின் படி குற்றமாக வழக்குப்பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்