ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு ரயிலிலிருந்து தவறி விழுந்த பெண் மரணம்!! இருவர் கைது
சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கடந்த 2ம் தேதி செல்போன் பறிக்க முயற்சித்தபோது பிரீத்தி என்ற கல்லூரி மாணவி ரயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை கந்தன்சாவடி திருவிக தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் பிரீத்தி வயது 22 இவர் கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் கம்பெனி ஓன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ம் தேதி மாலை பிரீத்தி கோட்டூர்புரத்தில் இருந்து வீட்டிற்கு பறக்கும் ரயில் சென்றுள்ளார். ரயில் அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையம் வரும் போது படிக்கட்டு அருகே நின்றிருந்த பிரீத்தியிடம் அடையாளம் தெரியாத இரண்டு நபர் அவரது செல்போனை பறிக்க முயன்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பிரீத்தி ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த போலீஸார் பிரீத்தியை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து திருவான்மியூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரீத்தி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து போலீஸார் பிரீத்தியிடம் செல்போன் பறிக்க முயன்ற அடையாறு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் மற்றும் பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
ஓடும் ரயிலில் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்றதில் இளம் பெண் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்