காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை தொடங்கியது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 14 ம் தேதி கைது செய்தனர். அவர் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை விசாரனைக்கு அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
அதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி அனுமதி வழங்கினார்.
இதனையடுத்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராம் தலைமையில் தொடங்க உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.