ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம் செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் பாரம்பரிய வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இந்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாடுகளின் உரிமையாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் 2017 ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு எதிராக தமிழ்நாட்டில் பெருமளவில் இளைஞர்கள் ஒன்று திரண்டு பலவிதமான போராட்டங்களை நடத்தினார்கள்.. அதிலும், சென்னையில் மெரினா கடற்கரையில் நடந்த போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
இதன்பின், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்தது மேலும் விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் (தமிழ்நாடு திருத்தம்)-2017 என்ற பெயரில் நிரந்தரச் சட்டமும் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தற்போது நடத்தப்பட்டு வருகிறது...
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கலாம் என்ற தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குழு விசாரித்தது.ஜல்லிக்கட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு உரிமை உள்ளது அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டிகளை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்து விட்ட பிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது
மேலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 19, 21-ஐ தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் மீறவில்லை என்றும் அரசமைப்பு சட்டத்தின் 51A பிரிவுக்கு எதிரானது இல்லை என கூறிய நீதிபதிகள் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள்
Tags: தமிழக செய்திகள்