Breaking News

கட் அவுட், பேனர்கள் வைக்க தடை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

அட்மின் மீடியா
0

 திமுக நிகழ்ச்சிகளில் ககட் அவுட், பேனர்கள் வைக்க தடை மீறி யாரேனும் பேனர் கட்டவுட் பிளக்ஸ் வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

கழகத் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள் - தோழர்கள்பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:-

2019-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தின் காரணமாக கோவையிலும், சென்னையிலும் இருவர் உயிரிழந்த போது, "திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கழக நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன். 

இதனை மீறி வைக்கும் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள்மீது கடும் எடுக்கப்படும்” என்று கழகத் தலைவர் அவர்கள் 13-9-2019 அன்று நடவடிக்கை அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை வெளிவந்த நாள்முதல் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெரும்பாலோர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்காமல், கழகத் தலைவர் அவர்களின் ஆணையை பின்பற்றி வந்தனர். இதற்கு மாறாக, பேனர் வைத்த கழக நிர்வாகிகள் சிலர்மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்தது.

ஆனால், தற்போது ஒரு சிலர், தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், பொதுமக்கள் முகம் சுளிக்கும் வண்ணம் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைத்திருப்பதாக தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும்பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்றும்; பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் – மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைக்கக் கூடாது என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அறிவிக்கிறேன்.

இந்த அறிவுரையை யாரேனும் மீறியதாக தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு வருமேயானால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைக் கழக மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback