Breaking News

உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்திய தமிழக அரசு முழு விவரம்

அட்மின் மீடியா
0

உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்திய தமிழக அரசு முழு விவரம்


இது தொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

உள்ளாட்சி அமைப்புகளின் மீது அதிக பற்றும் அக்கறையும் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறையின் அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தபோது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம் 2007-ஆம் ஆண்டு விதிகளின்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தாமாக பணிகளை தேர்வு செய்து நடைமுறைப்படுத்தும் வகையில் நிதி அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளாட்சிகளில் முறையான மக்களாட்சி மலர்ந்திட வழிவகை செய்யப்பட்டது.

அதன்படி, அப்போது கிராம ஊராட்சிகளுக்கு ரூ.2 இலட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 இலட்சம் வரையிலுமான பணிகளை உரிய ஊராட்சிகளின் தீர்மானத்தின் மூலம் தாமாகவே தேர்வு செய்து செயல்படுத்திட அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு எந்தவொரு மாற்றமும் இன்றி தற்போது வரை அதே நிதி அதிகாரம் வழங்கும் நடைமுறையே இருந்து வருகிறது. இவ்வரசு பதவியேற்றவுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலிமைப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எடுத்துக்காட்டாக, உள்ளாட்சிகள் தினம், கிராம ஊராட்சிகளுக்கு அலுவலகங்களாக கிராம செயலகங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வு படி உயர்வு, கிராம சபைக்கு உரிய அங்கீகாரம், பல்வேறு இணைய வழி சேவைகள், ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு வாகன வசதிகள் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை தற்போது உயர்த்தி வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் 6.12.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இப்புதிய அரசாணையின்படி, கிராம ஊராட்சிகளுக்கு ரூ.5 இலட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.25 இலட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.50 இலட்சம் வரையிலும் பணிகளை தாமாகவே உரிய தீர்மானம் நிறைவேற்றி மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப் பரவலாக்கத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கையானது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளாட்சியில் நல்லாட்சியை கிராமப்புற மக்களுக்கு வழங்க வழிவகை ஏற்படுத்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 



 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback