படிப்பில் போட்டிகாரணமாக விஷம் கொடுக்கப்பட்ட 8 ம் வகுப்பு மாணவன் பலி - சக மாணவியின் தாய் கைது..
காரைக்காலில் படிப்பில் போட்டிகாரணமாக பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுக்கப்பட்ட நிலையில், சிகிச்சையில் இருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், ரேஷன்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு பால மணிகண்டன்(வயது 13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பாலமணிகண்டன், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.பால மணிகண்டன் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள துடிப்பான சிறுவனாக பள்ளியில் வலம் வருகிறான்.
நேற்று முன்தினம் பள்ளியில் ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு மதியம் வீட்டுக்கு வந்துள்ளான். சிறிது நேரத்தில் பாலமணிகண்டன் திடீரென வாந்தி எடுத்துள்ளான். இதனையடுத்து மாலதி தனது மகனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது மாணவன் பாலமணிகண்டன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது
பள்ளியில் தான் ஏதோ நடந்துள்ளது யூகித்த பெற்றோர், இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளனர். பின்னர் பள்ளியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பால மணிகண்டனுடன் படிக்கும் சக மாணவி அருள்மேரியின் தாய் சகாயராணி விக்டோரியா, பள்ளி வாட்ச்மேன் தேவதாஸ் என்பவரிடம் வெள்ளை நிற பையில் இரண்டு கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வைத்து, 8ம் வகுப்பில் படிக்கும் பால மணிகண்டனிடம் அவரது உறவினர் கொடுக்கச் சொல்லியதாக கூறி கொடுத்து இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த காரைக்கால் நகர காவல் ஆய்வாளர் சிவகுமார், சகாயராணி விக்டோரியாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பால மணிகண்டனுக்கும், மாணவி அருள் மேரிக்கும் வகுப்பில் முதல் மாணவன் யார் என்பதில் போட்டியிருந்ததால், மகளுக்கு போட்டியாக இருக்கும் பால மணிகண்டன் மீது விக்டோரியா கோபத்தில் இருந்துள்ளார்.
பள்ளியில் நடைபெற இருக்கும் கலை நிகழ்ச்சியில் பால மணிகண்டன் பங்கேற் கூடாது என எண்ணிய மாணவியின் தாய் விக்டோரியா, விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த மாணவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் தாயார் மீது கொலை வழக்கு பதிவு செய்த கைது செய்தனர். மேலும் மாணவர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடியதுடன், போராட்டத்திலும் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags: தமிழக செய்திகள்