மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு
கள்ளகுறிச்சி மாவட்டம் கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய போராட்டம் வன்முறையாக வெடித்தது . இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு நிலையில் , ஜூலை 31ஆம் தேதி வரை கள்ளக்குறிச்சி தாலுக்கா சின்னசேலம் நயினார் பாளையத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக வன்முறை நடந்த இடத்தை உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய டிஜிபி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவி மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மாணவியின் மரணம் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மாணவி மர்ம மரணம் தொடர்பாக வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
இந்நிலையில் மாணவி மர்ம மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, மாணவி மரணம் பற்றி வழக்கு தொடர்ந்து பிறகு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
மாணவர்களின் டிசியை எரிக்க உரிமை அளித்தது யார்?
போராட்டம் நடத்த அனுமதி அளித்தது யார்? என மாணவியின் தந்தைக்கு நீதிபதி சதீஷ்குமார் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
மேலும் திடீர் கோபத்தால் வெடித்த வன்முறையல்ல, திட்டமிட்ட சம்பவம் எனவும் குறிப்பிட்டார். வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும் .
மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் உடலை 3 மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உடல் மறுகூராய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவியின் தந்தை தனது வழக்கறிகருடன் உடல் மறு கூராய்வு போது உடனிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கலவரத்திற்கு யார் காரணம் என்பதை புலன் விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்தகட்ட வழக்கு விசாரணை வரும் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Tags: தமிழக செய்திகள்