Breaking News

செங்கல்பட்டு இரட்டைக்கொலை - 2 ரவுடிகள் என்கவுன்ட்டர்

அட்மின் மீடியா
0

செங்கல்பட்டு நகரில் நேற்று  நிகழ்ந்த இரட்டைப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரில் 2 பேர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


காவல்துறையினர் ரவுடிகளைப் பிடிக்க முயன்ற போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்ப முயன்றதால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு கார்த்திக் என்கின்ற அப்பு கார்த்திக் என்பவர் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்கள் இந்த சம்பவத்தில்  அப்பு கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பின் தப்பி ஓடிய அதே கும்பல் செங்கல்பட்டு மேட்டு தெரு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த சீனிவாசன் என்பவரது மகன் மகேஷ் என்பவரை அவரது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்து சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் மகேஷும் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை தீவிரமாக தேடி வந்த நிலையில், மறைமலை நகரில் பதுங்கியிருந்த அஜய் என்பவரை 2 கைகள் சிதைந்த நிலையில் தனிப்படை போலீஸ் கைது செய்தனர். 

மேலும் உத்திரமேரூர் அருகே பதுங்கி இருந்த தினேஷ், மொய்தீன் ஆகிய இரண்டு ரவுடிகளையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்து வரும்போது காவல்துறையினர் மீது ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்ப முயன்றனர். இதில் இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து தற்காப்புக்காக காவல்துறையினர் ரவுடிகளை நோக்கி சுட்டனர். அதில் தினேஷ்,மொய்தீன் ஆகியோர் கொல்லப்பட்டனர். 

அவர்களின் உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இருவரின் மீதும் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்த இரட்டைக்கொலையும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த என்கவுண்டரும் பொதுமக்களை பதற்றமடையச் செய்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback