இந்தோனேஷிய விமானத்தின் கறுப்பு பெட்டி கிடைத்தது
இந்தோனேஷியா அருகே ஜாவா கடலில் மூழ்கிய பயணியர் விமானத்தின் கறுப்பு பெட்டி எனப்படும் விமானத்தின் தகவல்களை சேமிக்கும் சாதனம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் ஒன்று கடந்த 9 ந்தேதி புறப்பட்டு சென்றது.ஆனால், கிளம்பிய 4 நிமிடங்களிலேயே 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.
விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது.
கடற்படையைச் சேர்ந்த நீச்சல்வீரர்கள் கடலுக்கு அடியில் நடத்திய தேடுதலில் விமானத்தின் ஒரு கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுஉள்ளது.
மற்றொரு கறுப்பு பெட்டியையும் தேடும் பணி நடந்து வருவதாக அந்த நாட்டின் ராணுவம் கூறியுள்ளது.இதன் மூலம் விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான விபரங்கள் தெரியவரும் என நம்பப்படுகிறது.
Tags: வெளிநாட்டு செய்திகள்