Breaking News

சென்னையில் ஆன்லைனில் ஏமாந்தவரின் ரூ44,500/- பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் போலீஸார்

அட்மின் மீடியா
0

ஆன்லைனில் பணத்தை இழந்தவருக்கு சைபர் கிரைம் போலீஸார் பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.



சென்னை சூளைமேடு பாரி தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (34). இவர், எஸ்பிஐ வங்கியின் கடன் அட்டை வைத்துள்ளார்.

கடந்த மாதம் 8-ம் தேதி தங்கராஜை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தான் எஸ்பிஐ வங்கியில் பணிபுரிவதாகவும், தங்களது கடன் அட்டை காலாவதியாகிவிட்டதாகவும், இனிமேல் அதனை பயன்படுத்த முடியாது புதியதாக கடன் அட்டை விண்ணப்பம் செய்ய தங்களது பழைய கடன் அட்டை விவரங்களை தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.

அதனை உண்மை என நம்பிய தங்கராஜ், தனது கடன் அட்டையின் விவரங்களை கொடுத்துள்ளார். மேலும் தனது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணையும் பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் தங்கராஜ் கடன் அட்டையிலிருந்து ரூ.44,500 எடுக்கப்பட்டிருப்பதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த தங்கராஜ், உடனடியாக இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரின் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் விசாரணையில், அந்த நபர் தங்கராஜின் கடன் அட்டையில் இருந்து ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தங்கராஜின் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி, எஸ்பிஐ வங்கி நிர்வாகத்துக்கு விதிகளுக்கு உட்பட்டு சைபர் கிரைம் போலீஸார் பரிந்துரை கடிதம் அனுப்பினர்.

இதையடுத்து எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தினர், தங்கராஜின் வங்கிக் கணக்குக்கு பணம் ரூ.44,500-ஐ திரும்ப செலுத்தினர். மேலும், மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback