மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையிலான சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் வசூலிக்க உத்தரவு
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலை குண்டும், குழியுமாக இருப்பது தொடர்பாக உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த சாலையில் உள்ள குழிகள் அனைத்தும் 10 நாட்களில் சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்பு நீதிபதிகள் மதுரவாயல் வாலாஜாபேட்டை சாலையை பழுதுபார்க்கும் வரை 2 வார காலத்துக்கு அந்த சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Tags: தமிழக செய்திகள்